ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் அணியில் இருந்து மிக முக்கிய நபர் விலகியுள்ள தகவல் ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தின் முடிவில் சுமார் 204 வீரர்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக ரூ.551 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
அதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 89.90 கோடிகளை செலவு செய்து 23 வீரர்களை வாங்கியுள்ளது. இதனிடையே மெகா ஏலத்துக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா, தென்னாபிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டைன், ஆஸ்திரேலியாவின் சைமன் கேட்டிச் மற்றும் தமிழகத்தின் ஹேமங் பதானி ஆகியோரை தங்கள் அணியின் பயிற்சியாளராக அறிவித்து ஹைதராபாத் அதிரடி காட்டியது.
ஏற்கனவே முத்தையா முரளிதரன், டாம் மூடி போன்ற தரமான பயிற்சியாளர்கள் இருந்த வேளையில் இவர்களும் அணியில் இணைந்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
இந்நிலையில் ஹைதராபாத் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் சைமன் கேட்டிச் அந்தப் பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரபலமான “தி ஆஸ்திரேலியன்” பத்திரிக்கையில் திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் மெகா ஏலத்துக்கு முன்பாக எந்தெந்த வீரர்களை வாங்க வேண்டும் என்ற முடிவை சைமன் கேட்டிச் உள்ளிட்ட பயிற்சியாளர்களுடன் விவாதித்த பின் ஹைதராபாத் அணி நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் திட்டமிட்ட வீரர்களை வாங்காமல் சில வீரர்களை மிகப்பெரிய தொகைக்கு பயிற்சியாளர்களை கேட்காமல் அந்த அணி நிர்வாகம் வாங்கியதாக தெரியவருகிறது.இது பயிற்சியாளர் குழுவில் உள்ள ஒரு சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் அதிருப்தியடைந்த சைமன் கேட்டிச் ஹைதரபாத் அணியில் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.