அயோத்தியில் கட்டப்படும்
ராமர் கோவில்
, இந்தியாவின் தேசியக் கோவிலாக திகழும் என்று தன்னிச்சையாக அறிவித்துள்ளார்
யோகி ஆதித்யநாத்
. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக
ஆட்சிக்கு வந்தது முதலே.. “ஒரே நாடு.. ஒரே” என்ற முழக்கத்தை முன்வைத்து ஒவ்வொரு காயாக நகர்த்தி வருகிறது. இந்த வரிசையில் இப்போது ஒரே நாடு ஒரே கோவில் என்ற திட்டத்தை அது கையில் எடுக்கிறதா என்ற சந்தேகம் எழும் வகையில் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு அமைந்துள்ளது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், அயோத்தியில் மாபெரும் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் 2023ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். அது திறந்த பின்னர் இந்தியாவின் தேசியக் கோவிலாக அது திகழும் என்று கூறினார். இதுதான் சர்ச்சையாகியுள்ளது.
இந்தியாவுக்கு தேசியக் கொடி, தேசிய விலங்கு, தேசியப் பறவை என பலவும் உள்ளது. இந்த வரிசையில் தேசியக் கோவில் என்ற ஒன்றை புதிதாக பாஜக உருவாக்கப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே தேசிய மொழி என்று இந்தியைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியாவுக்கென்று எந்த தேசிய மொழியும் கிடையாது. மற்ற மொழிகளைப் போல இந்தியாவும் ஒரு பிராந்திய மொழிதான். ஆனாலும் விடாமல் இந்தியைத் திணித்துக் கொண்டுதான் இருக்கிறது பாஜக அரசு.
அந்த வரிசையில் ராமர் கோவிலை இந்தியாவின் தேசியக் கோவிலாக அறிவிக்கும் திட்டம் பாஜகவிடம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமான பாஜக தலைவர்கள் யாராவது ஏதாவது பேசினால், அவர்கள் பேசும் விஷயம் அமல்படுத்தப் படப் போகிறது அல்லது செயல்படப் போகிறது என்றுதான் அர்த்தம். அந்த வகையில் பாஜகவின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் யோகி ஆதித்யநாத். பிரதமர் பதவிக்கே அவர் தயாராகி வருவதாகவும் கூறப்படுபவர். அப்படிப்பட்டவர் இப்படிப் பேசியிருப்பதை சாதாரணமாக கடந்து போய் விட முடியாது.
ராமர் கோவில் விவகாரம்தான் இந்தியாவில் பாஜகவுக்கு உயிர் கொடுக்க முக்கியக் காரணமாக அமைந்தது. அத்வானி நடத்திய ரத யாத்திரையும், அதைத் தொடர்ந்து அயோத்தியில் நடை பெற்ற மிகப் பெரிய கலவரமும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதும்தான், பாஜக ஒரு சக்தியாக நாடு முழுவதும் உருவெடுக்க முக்கியக் காரணம். இதை அடிப்படையாக வைத்துத்தான் பாஜக மத்தியில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. வாஜ்பாய் பிரதமர் ஆனார். இன்று தான் நினைத்த கோவிலை கட்டி வருகிறது பாஜக.
ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டதும் அந்தக் கோவில் பாஜகவினரின் புனித தலமாக மாறும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அதை தேசியக் கோவிலாக மாற்றும் திட்டத்தில் பாஜக இருப்பதாகவே இப்போது கருதப்படுகிறது. காரணம், யோகியின் பேச்சு. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் வரிசையில் ஒரே நாடு ஒரே கோவில் என்றும் வருமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.