திரினமூல் காங்கிரஸ்
கட்சித் தலைவர் மமதா பானர்ஜிக்கும், அவரது உறவினரும், கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற நம்பர் 2 தலைவருமான அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில்,
அபிஷேக் பானர்ஜி
மீதான தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்
மமதா பானர்ஜி
. அவருக்கு தேசிய பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்துள்ளார்.
மமதா பானர்ஜியின் உறவினர்தான் அபிஷேக்பானர்ஜி. இவர்தான் கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற நம்பர் 2 தலைவர். மமதாவுக்கு அடுத்து இவர்தான். இவர் கூறும் அறிவுரைகள், வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் செயல்படுகிறார் மமதா பானர்ஜி. இவருக்குத்தான் கட்சியிலும் அதிக முக்கியத்துவம் உள்ளது. அபிஷேக் மூலமாகத்தான் பிரஷாந்த் கிஷோரும் கூட திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு வழிகாட்டும் பணிக்கு வந்து சேர்ந்தார்.
ஆனால் அபிஷேக் பானர்ஜிக்கும், கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் இடையே எப்போதும் ஆகவில்லை. மூத்த தலைவர்களை அபிஷேக் மதிப்பதில்லை, ஓரம் கட்டுகிறார். அவர்களுக்கும் மமதாவுக்கும் இடையே நந்தி போல இருக்கிறார என்றெல்லாம் அவர்கள் குமுறுகின்றனர். பல மூத்த தலைவர்களுக்கு கடந்த சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் பலருக்கு சீட் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் பி.கே.வும், அபிஷேக்கும்தான் காரணம் என்று அவர்கள் குமுறுகின்றனர்.
மமதாவுக்கும் கூட அபிஷேக் மீது இடையில் அதிருப்தி வந்தது. இருவருக்கும் இடையே உரசலும் உருவானது. இந்த உரசல் காரணமாக பி.கே.வை மமதா நிறுத்தி விடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அபிஷேக் மீதான தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார் மமதா பானர்ஜி. அதாவது கட்சியின் நிர்வாகிகள் குழுவை மாற்றியமைத்துள்ளார். அதில் அபிஷேக்கை கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக மமதா நியமித்துள்ளார். இதன் மூலம் அவருக்கும் அபிஷேக்குக்கும் இடையிலான பூசல் முடிவுக்கு வந்து விட்டதாக உணர முடிகிறது.
நிர்வாகிகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மமதாவின் விசுவாசிகள்தான். தேசிய துணைத் தலைவராக யஷ்வந்த் சின்ஹா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரதா பக்ஷி, சந்திரிமா பட்டச்சார்யா ஆகியோரும் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு, மீடியா கோ ஆர்டினேட்டர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா திரினமூல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையனுக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. தற்போது அவர் தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.
இளம் தலைவர்களை விட மூத்த தலைவர்களுக்கே மமதா முக்கியத்துவம் கொடுத்துள்ளார். காங்கிரஸிலிருந்து தாவி வந்து திரினமூல் கட்சியில் இணைந்தவர்களான சுஷ்மிதா தேவ், சுபல் பெளமிக் மற்றும் முகுல் சங்மா ஆகியோருக்கு கட்சியின் வட கிழக்கு பொறுப்பாளர்கள் பதவி தரப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் பட்டியல் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு மமதா பானர்ஜி 25 நிமிடம் பேசினார். அவர் பேசுகையில், கட்சியில் மூத்த தலைவர்களம், இளையவர்களும் இணைந்து செயல்பட வேண்டும். இருவரது உழைப்பும் முக்கியமானது. இருவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமானது. ஒரே அணியாக அனைவரும் செயல்பட வேண்டும் என்பதே எனது ஒரே எதிர்பார்ப்பு என்றார் மமதா பானர்ஜி.கட்சியில் நிலவி வந்த பல பிரச்சினைகளுக்கு இந்த நிர்வாகிகள் பட்டியல் மூலம் மமதா பானர்ஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கருதப்படுகிறது. அதேசமயம், பி.கே. நீடிப்பாரா என்பது மட்டும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.