பிலிபிட்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நான்காம் கட்ட தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. இதில், பிலிபிட் உள்ளிட்ட சில மாவட்டங்கள் அடங்கியுள்ளன.
இந்நிலையில், பிலிபிட் நகரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த 34 கண்காணிப்பு கேமராக்கள் சேதம் அடைந்திருந்தன. இதைப்பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நாசவேலையை, அரசியல் கட்சியினர் யாரேனும் செய்திருப்பர் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், குரங்குகளின் சேட்டை என்பது விசாரணையில் தெரியவந்தது.
பிலிபிட் மாவட்ட கூடுதல் கலெக்டர் கவுதம் கூறியதாவது: இந்த வளாகத்தில் தலா 2,500 ரூபாய் செலவில் 52 கேமராக்கள் பொருத்தியிருந்தோம்.இவற்றில் 34 கேமராக்களை குரங்குகள் சேதப்படுத்தின. இதையடுத்து வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் இதுவரை ஏழு குரங்குகளை பிடித்துள்ளனர். போலீஸ் படையினரும் 24 மணி நேரமும் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நாளான மார்ச் 10ம் தேதி வரை இந்தப் பாதுகாப்பு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement