டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை தீவிரவாத அமைப்புடன் தொடர்புப்படுத்தி பேசிய ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகிக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தவர் குமார் விஷ்வாஸ். அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மியில் இருந்து விலகினார். கேஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.
இதனிடையே, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுவதை அடுத்து, அங்கு அக்கட்சிக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார் குமார் விஷ்வாஸ். இந்நிலையில், கடந்த வாரம் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், அரவிந்த் கேஜ்ரிவால் காலிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இது, நாடு தழுவிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இந்த குற்றச்சாட்டினை கேஜ்ரிவால் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த சூழலில், குமார் விஷ்வாஸுக்கு கடந்த சில தினங்களாக பல்வேறு தளங்களில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து தீவிரமாக பரிசீலனை நடத்திய மத்திய அரசு, அவருக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் அடங்கிய ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM