கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, கோவையில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட சிறப்பு மேற்பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 2,303 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் காலை முதலே வாக்காளர்கள் கூட்டம் காணப்பட்டது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மாவட்டம் முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கும் நிலையில், வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு தெர்தல் ஸ்கேனர் மூலம் என்னும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னர் கிருமிநாசினியைக் கொண்டு கைகளை சுத்தம் செய்தப் பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கோவையை பொறுத்தவரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் பணம் விநியோகிப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புகார் அளித்து வந்த நிலையில், அசம்பாவிதம் நடைப்பெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட சிறப்பு தேர்தல் மேற்பார்வையாளராக நாகராஜன் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் இன்று கெம்பட்டி காலனி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் பதற்றமான 424 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறையில் இருந்தபடி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.