திருவனந்தபுரம்: கேரள சட்டசபையின் 4வது கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் நேற்று காலை துவங்கியது. சட்டமன்ற மரபுப்படி, அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் உரையை கவர்னர் அவையில் வாசிப்பார். சில தினங்களுக்கு முன்பு கவர்னர் உரையை கேரள அரசு கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு நேற்று முன்தினம் காலை வரை அவர் அங்கீகாரம் அளிக்கவில்லை. முதல்வர் பினராய் விஜயன் அவசர அவசரமாக கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆரிப் முகம்மது கானை சந்தித்து சமாதானம் பேசினார். இதையடுத்து உரைக்கு கையெழுத்து போட கவர்னர் சம்மதித்தார்.சமீபத்தில் கவர்னரின் கூடுதல் தனி செயலாளராக பாஜ.வை சேர்ந்த ஹரி.எஸ்.கர்த்தா நியமிக்கப்பட்டார். இதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கவர்னர் மாளிகையில் அரசியல் கட்சி சார்புடைய ஒருவரை நியமிக்க கூடாது என்று கேரள பொது ஆட்சித்துறை செயலாளர் ஜோதிலால் கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். இது கவர்னருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், முதல்வர் பினராய் விஜயன் தன்னை சந்திக்க வந்த போது ஜோதிலாலை பணியில் இருந்து மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். இதுதான் கவர்னர் உரைக்கு கையெழுத்திட மறுத்ததற்கான காரணமாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஒரு ஐஏஎஸ் அதிகாரியை பலிகொடுத்து கவர்னர் முன் கேரள அரசு மண்டியிட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. முல்லைப்பெரியாறில் புதிய அணைகவர்னர் ஆரிப் முகமது கான் உரையில், ‘முல்லை பெரியாறு அணையை பொறுத்தவரை அண்டை மாநிலமான தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால், அதே நேரத்தில் கேரள மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது. ஒன்றே கால் நூற்றாண்டு பழமையான தற்போதைய அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்பதுதான் கேரள அரசின் விருப்பம்,’ என்றார்.