தமிழகத்தின் மயத்தம் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 439 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், இளம் தலைமுறையினர், மூத்த குடிமக்கள் என பலரும் உற்சாகமாக தங்களது ஜனநாயக கடமையை இன்று செலுத்தினர்.
இந்நிலையில், நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட இருபத்தி ஆறாவது வார்டை சேர்ந்த நாகராஜன் என்பவர், இன்று காலை தனது வாக்கை செலுத்துவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.
அப்போது தேர்தல் அலுவலர்கள், “நீங்கள் ஏற்கனவே வாக்களித்து வைத்து விட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த நாகராஜன், “நான் இன்னும் வாக்களிக்கவில்லை., இப்போதுதான் நான் எனது வாக்கை செலுத்த வந்துள்ளேன்” என்று தெரிவித்து, தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, தேர்தல் அதிகாரிகள் விசாரணை செய்ததில், நாகராஜனின் வாக்கை மர்ம நபர்கள் கள்ள ஓட்டு போட்டு சென்றது தெரியவந்தது.
இதற்கிடையே, இந்து முன்னணி மாநில தலைவர் குற்றாலநாதனை திணைக்கு அழைத்துவந்த நாகராஜன், தன்னை வாக்களிக்க அனுமதிக்குமாறு தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணைய படிவம் 14-ஐ பூர்த்தி செய்த நாகராஜனுக்கு, வாக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர்.
சர்க்கார் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் விஜய் தனது வாக்கை போராடி செலுத்தி சென்றதுபோல, நாகராஜன் இன்று சிறப்பான சம்பவம் செய்து உள்ளார்.