சிங்கப்பூர் பிரதமர் பேச்சு தேவையில்லாதது.. தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

சிங்கப்பூர்
நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் லீ சியன் லூங் பேசும்போது, இந்திய எம்.பிக்கள் குறித்து கருத்து தெரிவித்தது தேவையில்லாதது என்று
இந்தியா
கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிங்கப்பூர் தூதரை நேரில் அழைத்து
மத்திய வெளியுறவுத்துறை
தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு விவாதத்தின்போது மறைந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை வெகுவாகப் புகழ்ந்து பேசியிருந்தார் லீ சியன் லூங். நேரு உருவாக்கிய இந்தியாவின் இன்றைய நிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்திருந்தார். இந்திய எம்.பிக்கள் பாதிப் பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்றும் தெரிவித்திருந்தார். நேரு போன்ற தலைவர்கள் காட்டிய வழியில் இன்றைய தலைவர்கள் நடப்பதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நேரு மட்டுமல்லாமல் இஸ்ரேல் நாட்டின் மறைந்த தலைவர் பென் குரியன் குறித்தும் பேசியிருந்தார். இவர்கள் எல்லாம் அந்த நாட்டின் சிற்பிகள் என்றும் அவர் புகழ்ந்துரைத்திருந்தார். இந்த நிலையில் லீ லூங்கின் பேச்சுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தேவையில்லாத பேச்சு என்று இதை இந்தியா வர்ணித்துள்ளது.

இதுதொடர்பாக சிங்கப்பூர் தூதர் சிமான் வாங்-கை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை தனது அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரியப்படுத்தியது. சிங்கப்பூர் பிரதமரின் பேச்சு தேவையில்லாத ஒன்று என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிக நெருங்கிய தொழில்முறைக் கூட்டாளியாக சிங்கப்பூர் திகழ்கிறது. சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் இடையே நீண்ட கால பந்தமும் உள்ளது. சிங்கப்பூரில் பெருமளவிலான இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். வழக்கமாக தனது நெருங்கிய நாடுகளின் தூதர்களை அழைத்து இந்தியா எச்சரிக்கை விடுப்பதில்லை. ஆனால் சிங்கப்பூர் தூதரை நேரில் வரவழைத்து தனது கண்டனத்தை இந்தியா பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.