தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக, இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட 200 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 5,794 வாக்கு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 27,800-க்கும் அதிகமான அதிகாரிகளும், 18,000 அதிகமான காவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
மொத்தமுள்ள 5,794 வாக்குச்சாவடிகளில், 1,061 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி முதல் சென்னையில் மட்டும் 45 பறக்கும்படைகள், மண்டலத்துக்கு 3 குழுக்கள் என்று 15 மண்டலத்துக்கும் 45 குழுக்கள் கூடுதலாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை, 30,49,532 ஆண் வாக்காளர்கள். 31,21,951 பெண் வேட்பாளர்கள் மற்றும் 1,629 பிற வேட்பாளர்கள் என மொத்தம் 61,73,112 வேட்பாளர்கள்.
காலை 9 மணி நிலவரப்படி, 2,44,683 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு செலுத்தியிருந்தனர். அதாவது மொத்தம் 3.96 விழுக்காடு மட்டுமே வாக்குப் பதிவாகியிருந்தது. காலை 11 மணி நிலவரப்படி, 10,94,379 பேர் வாக்கு செலுத்தியிருந்தனர். அதாவது, 17.73 விழுக்காடு வாக்குப் பதிவாகியிருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி, 23.42 விழுக்காடு வாக்குப் பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 35.34 விழுக்காடு வாக்குப் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் சென்னையில் தான் குறைந்த அளவு வாக்குப் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு வாக்குச் சாவடிகளில் மிகவும் மந்தமாகவே வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் யாரும் இல்லாமல் வெறும் அதிகாரிகள் மட்டுமே இருக்கும் நிலையும் நிலவுகிறது. மாலை ஐந்துமணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைவதால், (5-6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கான நேரம்) வேட்பாளர்கள், வாக்காளர்களைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டும் மேலும் அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்களிக்க வருமாறு அழைத்து வருகிறார்களாம். இதனால் மாலை 4 மணிக்கு மேல் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!