மொகடிஷு:
சோமாலியாவின் பிலெத்வெயினி நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று மதியம் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. வாடிக்கையாளர் போன்று வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.
இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 20 பேர் பலத்த காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். ஓட்டலும் கடுமையாக சேதமடைந்தது. இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சோமாலியாவில் தேர்தல் நடைமுறைகளை முடிப்பதில் நீண்ட காலதாமதம் மற்றும் பதற்றமான தேர்தல் செயல்முறைகளுக்கு மத்தியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சோமாலியா தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்பகமான தேர்தல் செயல்முறையை அவசரமாக முடிக்க வேண்டும் என ஐநா சபை மூத்த அதிகாரி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.