“தனக்கு பிறக்கவில்லை என்று தகராறு” 2 வயது குழந்தையை சீரழித்த தந்தைக்கு ஆயுள் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரண்டரை வயதான தனது மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் முட்டடா பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (34). அவருக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறந்த போது தன்னுடைய குழந்தை இல்லை என்று கூறி மனைவியிடம் அலெக்ஸ் அடிக்கடி தகராறு செய்து வந்து உள்ளார். தன்னுடைய குழந்தை தானா? என்பதை கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கூறி வந்து உள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. அலெக்ஸ், மனைவி, குழந்தை 3 பேரும் ஒரே அறையில் படுத்து தூங்குவது வழக்கம். இந்த நிலையில் இரவு நேரங்களில் அடிக்கடி குழந்தை அழுது வந்து உள்ளது. எதற்காக குழந்தை அழுகிறது என்ற காரணத்தை அலெக்சின் மனைவியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் இரவு குழந்தை அழுத போது அலெக்ஸ், குழந்தையை பலாத்காரம் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, கணவனுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். ஆனால் அலெக்ஸ் மனைவியை மிரட்டியதை தொடர்ந்து அவர் வேறு யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அலெக்சை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயகிருஷ்ணன், குழந்தையை பலாத்காரம் செய்த அலெக்சுக்கு ஆயுள் சிறையும், ₹ 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தனது குழந்தை இல்லை என்று கூறி சொந்த மகளை பலாத்காரம் செய்தவர் எந்த கருணைக்கும் தகுதி இல்லாதவர் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.