சென்னை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படடது. இதில், மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மற்ற இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்காளர்கள் ஒவ்வொருவராக வந்தபடி இருந்தனர். 8 மணிக்கு பிறகு வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்கள் எண்ணக்கை அதிகரித்தது. எனவே, 8 மணிக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
பண விநியோகம், கள்ள ஓட்டு புகார், வாக்குவாதம், போராட்டம் என பல்வேறு இடங்களில் பிரச்சனை ஏற்பட்டது. 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், ஒட்டுமொத்தமாக 60.70 சதவீதம் வாக்குகள் உத்தேசமாக பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், மாநகராட்சிகளில் 52.22 சதவீதமும், நகராட்சிகளில் 68.24 சதவீதமும், பேரூராட்சிகளில் 74.68 சதவீதமும் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தேர்தலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையும் படியுங்கள்…21 மாநகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும்- மு.க.ஸ்டாலின்