திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் மற்றும் பெண் அதிகாரி ஸ்வப்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மற்றும் சுங்க துறையினரும், தேசிய புலனாய்வு அமைப்பினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் கைதான ஸ்வப்னா சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்பு அவர் வேறு வேலைகளுக்கு செல்ல முயற்சித்தார்.
இந்த நிலையில் ஸ்வப்னாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி கிருஷ்ணகுமார் தலைவராக இருக்கும் தொண்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
இந்நிறுவனம் ஆதிவாசி மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் கேரள கிளை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்க ஸ்வப்னா சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், அவரை பொறுப்பேற்க அனுமதிக்கவில்லை. அதோடு அவரது பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட தகவலை தெரிவித்தனர்.
இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் கூறும்போது, இந்த தொண்டு நிறுவனத்தில் ஸ்வப்னாவை பணி நியமனம் செய்தது பற்றி தொண்டு நிறுவன அறக்கட்டளைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. முறையான அனுமதி பெற்று ஸ்வப்னா நியமிக்கப்படவில்லை.
அவரது நியமனத்தை கேரள கிளை நிறுவனத்தின் அதிகாரிகள் தன்னிச்சையாக செய்துள்ளனர். எனவே ஸ்வப்னாவின் நியமனத்தை ரத்து செய்துள்ளோம். மேலும் அவரை பணி நியமனம் செய்த கிளை நிறுவன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இதுதொடர்பாக போலீசாரிடமும் புகார் அளிக்கப்படும். புகார் தொடர்பான நகல், முதல்-மந்திரி, போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கும் அனுப்பப்படும், என்றார்.