உதகை: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பெண் வாக்காளர்களை விட ஆண் அதிக அளவில் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 4 நகராட்சிகளில் 108 பதவியிடங்கள், பேரூராட்சிகளில் 186 பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இவற்றில் அதிகரட்டி, பிக்கட்டி மற்றும் கேத்தி பேரூராட்சிகளில் தலா ஒரு வேட்பாளர் வீதம் 3 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் பத்தற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக ஓவேலி பேரூராட்சியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியை தேர்தல் பார்வையாளர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.
உதகை காந்தலில் உள்ள பதற்றமான சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி ஆய்வு செய்தார்.
ஒட்டு மொத்தமாக நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் அதிக அளவில் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர். ஆண் வாக்காளர்கள் 57.48 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 54.12 சதவீதமும் வாக்களித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது.