தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 12 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ் ஐ இ டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள பிரம்ம ஞானம் நடுநிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி ஆகியோர் திண்டிவனம் மாநகராட்சி 19வது வார்டில் உள்ள ரொட்டிக்கார தெரு தாகூர் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கின்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டை திருவள்ளூர் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களிக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் வேளாங்கண்ணி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரம் மாநகராட்சியில் உள்ள நகராட்சி பள்ளியில் வாக்களித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கிராம பஞ்சாயத்து பகுதியில் இருப்பதால், ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு அளித்துவிட்டார். அதேபோல பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் ஊரகப் பகுதியில் உள்ளதால், ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த விட்டனர்.