படின்டா – ஹிமாச்சல் பகுதிகளின் குளிர்கால முற்பகல் வேளைகள் ரம்மியமானவை. சூரியனின் வெப்பக் கரங்கள் உடலைத் தீண்டி இதம் தந்துவிடாதா என்ற ஏக்கத்தில் நாங்கள் அனைவரும் ஹர்ப்ரீத்தின் கீரைத் தோட்டத்தில் தேநீருக்காகக் கூடுவது வழக்கம். ஹர்ப்ரீத் புதிதாக மணமுடித்து வந்து சில நாள்களே ஆகியிருந்தன.
ஹர்ப்ரீத் தன் தோட்டத்தில் பாலக்கீரை, முள்ளங்கிம் பச்சைப் பட்டாணி பயிரிட்டிருந்தாள். இளம்பச்சை நிற இலைகள்மீது படர்ந்திருந்த பனித்துளிகள் சிதறிவிடாதபடி பக்குவமாக ஒவ்வோர் இலையாகக் கொய்து, அவற்றை அவள் இறுகக் கட்டும் அழகை என் வீட்டு பால்கனியிலிருந்தபடி கண்டு ரசிப்பது என் வழக்கம். அவளும் அங்கிருந்தபடியே புன்னகைத்து கையசைப்பாள். திருமணத்துக்காக சூடிக்கொண்ட மருதாணியின் அடர்சிவப்பு முழங்கைகள் வரை படர்ந்திருந்தது.
சில நாள்களாக அவளின் தோட்டத்தில் பஞ்சாபிப் பெண்கள் ஒன்று கூடி ஏதோ நடனம் பயில்வதுபோல் தெரிந்தது. ஹர்ப்ரீத்துக்கு சிறியதொரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அதற்கான ‘சங்கீத்’ வைபவத்துக்காக, பெண்கள் நடன ஒத்திகை செய்தார்கள். அவர்களது ஒத்திகைகளைப் பார்வையிட எனக்கு அனுமதியளிக்கப்பட்டது. தென்னிந்தியப் பெண்கள்மீது அவர்களுக்கு எப்பொழுதுமே மிகுந்த அபிமானமுண்டு. கல்வியில் சிறந்தவர்கள் என்று எப்போதும் கூறுவர்.
“பாங்க்ரா நடனம் ஆடப்போகிறீர்களா?” என்று என் அறிவுக்கு எட்டிய அளவில் கேட்டேன்.
பத்து பதினைந்து பெண்கள் கூடி, பாடிக்கொண்டே கைகளை வேகமாகத் தட்டியபடி தாளம் அமைத்து ஆடுவது பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருந்தது. ஹர்ப்ரீத், ரோஸி மற்றும் பிற பஞ்சாபிப் பெண்கள் பாடிக்கொண்டே ஆடினார்கள். நிதானமாகத் தொடங்கும் பாடல் சில நொடிகளிலேயே வேகம் பிடித்துவிடுகிறது. நாமும் அதே வேகத்தில் நடனத்தில் லயித்துவிடுவதை உணர முடியும்.
நடன அமைப்புகளைச் சரிபார்த்துக்கொண்டு ஆடியவர்களின் பாடல் எனக்கு புரியாமல்போனது, சிறிது ஏமாற்றம் தந்தது. நடனப் பயிற்சி முடிந்து உடல் வெப்பமடைந்த சுகத்தோடு அனைவரும் என்னைச் சுற்றி அமர்ந்துகொண்டார்கள். சல்வார் என்றழைக்கப்படும் சால்வையை உதறித் தள்ளிவிட்டு அனைவரும் ஆசுவாசமாக அமர்ந்தனர். “நடனம் எப்படியிருந்தது?” என்று ரோஸி புருவமுயர்த்தினார்.
“நடனம் அற்புதமாக வடிவம்கொண்டிருக்கிறது. நீங்கள் பாடுவது மட்டும் புரிந்துவிட்டால், நானுமே உங்களுடன் நடனம் ஆடத் தொடங்கிவிடுவேன்” என்றேன்.
“ஹீர்-ராஞ்சாபோல், சோஹ்னி-மஹிவால் (மெஹர்) போல், சசி-புன்ஹுன்போல் இந்தத் தம்பதியரும் காதலுக்கு நேரும் அனைத்துத் துயரங்களையும் கடந்து, காதல் பொய்த்துவிடாமல் வாழ வேண்டும் என்று வாழ்த்திப் பாடுகிறோம்” என்று ரோஸி கூறியதும், எனக்குள்ளிருந்த காதலி துயில் கலைந்து எழுந்தவள்போல் குதித்தெழுந்தாள்.
“அதென்ன கதைகள்? இப்போதே கூற வேண்டும்” என்று ரோஸியை நச்சரித்தேன். ரோஸி ஒரு நீண்ட பெருமூச்சுடன் கதையைத் தொடங்கினாள். அவளைச் சுற்றி அனைவரும் அமர்ந்துகொண்டோம். சிலர் பட்டாணி மணிகளை உரித்தெடுத்தனர், ஹர்ப்ரீத், பாதி நிறைவடைந்திருந்த கம்பளி ஆடையை பின்னத் தொடங்கினாள். வேறு சிலர் பாலக்கீரையைக் கொய்து ஆய்ந்தனர். நான் செவிக்கு உணவு படைக்கும் பசியுடன் அமர்ந்திருந்தேன். ரோஸி சிந்தி மொழியில் பாடினாள்.
“உன் கண்களைக் கால்களாக மாற்றி அவனிடம் சென்றுவிடு சோஹ்னி
அவனிடம் இப்போதே சென்றுவிடு.
அவனைக் குறித்து வேறெவருடனும் பேசாதே.
அவனை அனைவரிடத்திலுமிருந்து மறைத்து வைத்துவிடு.
உனதன்பான மெஹர் உனக்குப் பரிசளித்த காதல்வலியை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே.
உன் கண்களைக் கால்களாக மாற்றி
அவனிடம் சென்றுவிடு சோஹ்னி.”
ரோஸி தன்னை மறந்து கதைகளைச் சொல்லத் தொடங்கினாள். மாயவிசைக்கு அடிபணிந்தாற்போல் அனைவரும் அவள் கூறுவதைக் கேட்டிருந்தோம். ஓராயிரம் காதுகள் முளைத்ததுபோலிருந்தது எனக்கு. சில மணி நேரங்கள் கழித்து கதைகள் முடிந்தன என்றாள் ரோஸி. அப்போது அவள் குரல் தழுதழுத்தது. சிலர் கண்கள் மீறி உதடுவரை வழிந்துவிட்ட கண்ணீரைச் சிரித்துக்கொண்டே துடைத்தனர்.
“சிந்து நதிபோல் பிரவாகமாகப் பெருக்கெடுக்கிறதே என் கண்ணீர்” என்றாள் வயதில் மூத்த ஒருத்தி. உணர்வெழுச்சி மிகுந்திருந்தபோதும் அவள் கூறிய கதைமாந்தர்களின் பெயர்களை மனப்பாடம் செய்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.
ரோஸி கூறிய காதல் கதைகள் மனதைக் கொந்தளிக்க செய்துவிட்டிருந்தது உண்மைதான் என்றாலும், அவள் கூறிய கதைகளின் இலக்கியப் பின்னணியை ஆராய மனம் ஆவல்கொண்டது. அந்த ஆய்வின் விளைவாக மிகப்பெரிய இலக்கியக் கிடங்குக்குள் நுழையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழைமைவாய்ந்த சிந்தி இலக்கியத்தின் புகழ்பெற்ற கவிஞர் ‘ஷாஹ் அப்துல் லத்தீஃப் பிஹ்த்தாய்’ என்பவரின் கவிதைத் தொகுப்பான ‘ஷாஹ் ஜோ ரிஸாலோ’ பற்றிய அறிமுகம் கிடைத்த பிறகு சிறிதும் தாமதிக்காமல் படின்டா மாவட்ட நூலகத்திலிருந்து அப்புத்தகத்தை எடுத்துவந்து வாசிக்கத் தொடங்கினேன்.
தென்கிழக்காசிய இலக்கியங்களில் மிகவும் குறைந்த அளவே வெளிச்சத்துக்கு வந்துள்ள சிந்தி இலக்கியத்தின் முன்னோடிகளான ஷாஹ்-லத்தீஃப் பிஹ்த்தாய் மற்றும் புல்லேஹ் ஷா (Bulleh shah) போன்றவர்களின் படைப்புகளில் சூஃபி மற்றும் பக்தி சித்தாந்த முறைகளே பின்பற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
காதலை இறைமைத்தன்மையுடன் பொருத்திக் கூறுவது சூஃபி மற்றும் பக்தி கோட்பாடுகளாகும். ஆன்மாவானது இறைவனைச் சரணடையும் பயணமே பக்தி இலக்கியங்களின் அடிப்படை. அதுவே பொதுப்பார்வையில் காதல் கதைகள்போல் தோற்றம் கொள்வன. காதலில் மட்டுமே மரணம், சரணாகதியின் உச்சநிலை என்று போற்றப்படுகிறது.
ஷாஹ் அப்துல் லத்தீஃப் அவர்களின் ரிஸாலோவில் ஏழு ராணிகள் இடம்பெறுகின்றனர். ஷாஹ் தனது கவிமொழியின் மூலம் சிந்து நதிப் பகுதிகளின் வாய்மொழிக் கதைகளை இறைவாழ்வின் உருவகங்களாக மாற்றியமைத்துள்ள பேரெழிலை வியக்காமல் ஒரு கவிதையைக்கூட கடக்க இயலவில்லை.
சிந்து நதியின் கிளையாறுகளில் ஒன்றான செனாப் நதிக்கரையில் வாழும் குயவனின் மகள் சோஹ்னி. அவளைப் போன்றதொரு பேரழகி அப்பகுதியில் யாருமில்லை. தன் தந்தை வனையும் பானைகளைப் பக்குவமாக தீயில் சுட்டெடுத்து அவற்றின் மீது அழகிய ஓவியங்கள் வரைவது சோஹ்னிக்கு மிகவும் பிடித்தமான செயல். புக்காராவிலிருந்து குஜராத் வரை பயணம் செய்த வணிகனொருவன், சோஹ்னியை செனாப் நதிக்கரையில் பானைகள் வனைவதற்கான களிமண்ணைச் சேகரிக்கும்போது காண்கிறான்.
அவனது பெயர் பெய்க். சோஹ்னியின் மீது கொண்ட அளப்பறியா காதல், அவனை அனைத்தையும் மறக்கச் செய்துவிடுகிறது. தன்னுடன் வந்த வணிகர்களை மேற்கொண்டு பயணம் செய்யுமாறு கூறிவிட்டு, அவன் செனாப் நதிக்கரையில் தங்கிவிடுகிறான். சோஹ்னியைப் பார்ப்பதில் எந்தத் தடையும் விளைந்துவிடக் கூடாதென்று எண்ணி சோஹ்னியின் தந்தையிடம் எருமை மேய்ப்பவனாக வேலைக்குச் சேர்கிறான். தனது பெயரை மஹிவால் என்று மாற்றிக்கொள்கிறான். அந்தப் பெயருக்கு ‘எருமை பராமரிப்பவன்’ என்று பொருள்.
சோஹ்னி மஹிவாலிடம் பெருங்காதல் கொள்கிறாள். அவர்களின் உறவை விரும்பாத சோஹ்னியின் தந்தை அவளை வற்புறுத்தி செனாப் நதிக்கரையின் மறுகரையில் வாழும் ஒரு குயவனுக்கு மணமுடித்து வைத்துவிடுகிறார். மஹிவால் இக்கரையிலும், சோஹ்னி மறுகரையிலும் பிரிந்து வாழவேண்டிய சூழல் ஏற்படுகிறது. பிரிவுத் துயர் தாளாத சோஹ்னி தினமும் இரவு யாருமறியா வண்ணம் நன்கு சுடப்பட்ட பானையொன்றை கவிழ்த்துப் பிடித்தபடி செனாப் நதியை நீந்திக் கடந்து மறுகரையில் மஹிவாலைச் சென்றடைவாள். அவளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் மஹிவால் பெரிய நதி மீன் ஒன்றைப் பிடித்து அவளுக்காகச் சமைத்து வைத்திருப்பான். இருவரும் நன்கு உணவருந்தி பேசிக் கூடிக் களித்த பின் விடியுமுன்னர் மீண்டும் அப்பானையைப் பிடித்துக்கொண்டு செனாப் நதியை நீந்திக் கடந்து தன் இல்லத்தை அடைந்துவிடுவாள் சோஹ்னி. ஒரு முறை நதியில் வெள்ளபெருக்கு அதிகமிருந்ததால் சோஹ்னி மிகுந்த சிரமத்தோடு நதியைக் கடந்தாள். அதேநேரத்தில், அன்று நதியில் மீன்கள் ஏதும் பிடிபடவில்லை. பெரும்பசியுடன் வரும் சோஹ்னிக்கு படைக்க ஏதுமில்லாமல் போய்விடுமே என்ற துயரம் மேலிட மஹிவால்
களைப்பும் பசியும் வாட்டிய சோஹ்னி அன்றைய உணவை வெகுவாக ரசித்து உண்டாள்.” மிகவும் சுவையாக இருக்கிறது மஹிவால்” என்றாள். பொங்கிப் பெருகும் குருதி மஹிவாலின் வெண்ணிற ஆடையைச் சிவப்பாக மாற்றியிருந்தது.
வெகு நாள்கள் தொடர்ந்த அவர்களது சந்திப்பை சந்தேகித்த சோஹ்னியின் உறவுக்காரப் பெண்ணொருத்தி இரவு கண்விழித்து சோஹ்னியைக் கண்காணித்தாள். அப்போது சோஹ்னி வைக்கோல் மூட்டையில் மறைத்துவைத்திருந்த ஒரு பானையை எடுத்துக்கொண்டு நதியை நீந்திக் கடப்பது தெரிந்தது. தன் குடும்பத்துக்கு சோஹ்னி துரோகமிழைப்பதாகக் கருதிய அப்பெண், சோஹ்னி எடுத்துச் செல்லும் சுடப்பட்ட இறுகிய பானையை மாற்றி அவ்விடத்தில் சுடப்படாத புது களிமண் பானையை வைத்துவிடுகிறாள்.
அன்று செனாப் நதி வழக்கத்தைவிட அதிகம் கொந்தளித்தது. அலைகள் மேலெழும்பி அடங்கியது, சோஹ்னிக்கு ஏதோ செய்தி கூறுவதுபோலிருந்தது.
ஓரிரு நட்சத்திரங்கள் பிரகாசமாக மின்னிக்கொண்டே செனாப் நதியில் விழுந்தன. சோஹ்னி, தன் உடையை இறுகக் கட்டிக்கொண்டு புறப்பட்டாள். எவ்வளவு உயர்ந்த அலை வந்தபோதும் அது என் மஹிவாலின் மீது நான் கொண்டிருக்கும் காதலை அழித்துவிட முடியாது என்றெண்ணியபடி மறைத்துவைத்திருந்த பானையைப் பிடித்துக்கொண்டு நதியில் இறங்கினாள். சோஹ்னி நீந்திவருவது மஹிவாலுக்குத் தெரிந்துவிட்டது. அவன் மனத்தை இனம் புரியாத பதற்றம் தொற்றிக்கொண்டது. என்றுமில்லாத தவிப்பு இன்று ஏன் ஏற்படுகிறது என்றெண்ணிக்கொண்டே பார்த்திருந்த மஹிவாலின் கண்முன்னே சோஹ்னி நீரில் மூழ்கினாள். சுடப்படாத களிமண் பானை பாதி வழியிலேயே கரைந்துவிட, நீச்சல் தெரியாத சோஹ்னியின் வளையணிந்த கைகள் மஹிவாலை “வா” என்று அழைத்துவாறு மூழ்கின.
நீர்க்குமிழிகள் தோன்றி மறைந்தன. செனாப் நதியின் அலைகள் மேலும் உயர்ந்தன. குருதி பொங்கும் தொடையை மறைத்திருந்த செந்நிற ஆடையை கழற்றியெறிந்த மஹிவால், செனாப் நதியில் இறங்கினான்.
செனாப் நதியில் அலைகள் ஓய்ந்தன. விடிவதற்கு முன்னரே நதி செந்நிறம் பூண்டிருந்தது. சூரியோதயம் அதை மேலும் சிவக்கச் செய்தது. இரு நதிக் கரையிலும் மனிதர்கள் கூடி சிவப்பின் காரணம் குறித்துப் பேசிக்கொண்டனர்.
ஷாஹ் அப்துல் லத்தீஃபின் கவிதை வரிகளில் சோஹ்னி மஹிவாலின் கதையை வாசித்து முடித்ததும் மனம் சமநிலையிழந்து தவித்தது.
மொமல்-ரானோ, உமர்- மருஇ, லிலான்-சனேசர், நூரி-தமாச்சி, சசி-புன்ஹுன், ஹீர்- ராஞ்சா காதல் கதைகளும் இவரின் கவிதைகளுள் அடக்கம். அனைத்துக் கதைகளிலுமே மரணம் என்பது சரணாகதி நிலையாகப் பார்க்கப்படுகிறது. ஹீர்-ராஞ்சா கதையிலும் இதே போன்றதொரு நிலை. இறுதியில் காதலர்கள் விஷம்வைத்து கொல்லப்படுகிறார்கள்.
இக்கதைகளில் யாவும் வழமை போலல்லாமல் பெண்களின் காதல் பேசப்படுகிறது.
ஆண்களின் கண்ணோட்டத்திலேயே பொதுவாக விவரிக்கப்படுவதுபோலல்லாமல் ஆன்மிகமும், காதலும், தாய்மையும் சிந்தி வாய்மொழிக் கதைகளில் பெண் கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டிருப்பது நமது புரிதலை மேம்படுத்துவதாக இருக்கிறது.
ஷாஹ் லத்தீஃப், புல்லெ ஷாஹ், ரூமி மற்றும் பல பக்தி இலக்கியங்களின் பெண்கள் எல்லோரும் மனதிட்பத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்கள். “என் ஏழு ராணிகளும் அன்பை மட்டும் தேர்ந்தெடுத்தவர்கள். அவர்கள் எவ்வித பகையுணர்வுக்கும், அடக்குமுறைக்கும் அடிபணியாதவர்கள்” என்று ஷாஹ் அப்துல் லத்தீஃப் தன் கவிதைத் தொகுப்பின் முடிவுரையில் எழுதியிருப்பார்.
சோஹ்னி மஹிவால், ஹீர்-ராஞ்சாவின் அழகோவியங்களை உயிரோட்டத்துடன் வடித்தவர், பெருமதிப்புக்குரிய சர்தார் சோபா சிங் என்ற ஓவியர். அவரது ஓவியங்கள் ஹிமாச்சல் பிரதேஷின் அந்த்ரேட்டா பகுதியில் ஓர் அருங்காட்சியகத்தில் காணக் கிடைத்தன. செனாப் நதியை நீந்திக் கடக்க முயலும் சோஹ்னி, அவளுக்காகக் கரையில் காத்திருந்த மஹிவால், இருவரின் ஓவியத்தையும் வெகுநேரம் கண்டு மயங்கி நின்றிருந்தேன். ஓவியத்தின் வண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று குழைந்து புணர்ந்திருந்தவிதம், அவர்களது காதலின் உருவகமாகவே எனக்குத் தெரிந்தது. புல்லாங்குழல் வாசிக்கும் ராஞ்சாவின் ஓவியம் அவனது மடியில் சாய்ந்தபடி அதைக் கேட்டு ரசிக்கும் ஹீர் என்று அருங்காட்சியகம் முழுதும் ஓவியங்கள் நிறைந்திருந்தன. திரு சோபா சிங் ஓவியம் வரையத் தொடங்கியதும் அவர் மற்றவருடன் பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிடுவாராம். இது அங்கு வந்திருந்த பார்வையாளர் ஒருவர் கூறியது. அது உண்மையா, பொய்யா என்று ஆராய்வது அறியாமையின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும் ஏனென்றால்
அருங்காட்சியகத்தின் அருகே களிமண் பொருள்கள் செய்யும் ஆலை ஒன்றிருந்தது. அயல்நாட்டவர்கள் கோடைக்காலத்தில் அவ்விடத்துக்குப் படையெடுப்பது வழக்கம். அங்கு சென்றபோது பானைகள், களிமண் சிற்பங்கள் ஆங்காங்கே இரைந்து கிடந்தன. மாணவர்கள் கைவினைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கிடந்த பானை ஒன்றைக் கைகளில் எடுத்தேன். பானை கனமாக இறுகியிருந்தது. சோஹ்னி மஹிவாலைக் காண எடுத்துச் சென்ற பானைபோல் அப்போது அது எனக்குத் தெரிந்தது. “இவை விற்பனைக்கல்ல” என்றார் அப்பள்ளியின் ஆசிரியர். “நான் விலைக்குக் கேட்கவில்லையே, எடுத்துச் செல்கிறேன்’’ என்றேன். “இது என்னிடம் இருக்க வேண்டும்’’ என்றேன். “நான் கடுமையாகக் காதல் வயப்படுபவள்” என்றேன். அவர் சிரித்தார். பின்பு எடுத்துச் செல்ல அனுமதியளித்தார்.
`நதி செல்லும் வழிகளிலெல்லாம் அவள் தனது (சோஹ்னி) பாதையை அமைத்துக்கொள்வாள்.
காதலில் கயமை செய்யும் பெண்களே நதிக்கரையைக் குறித்து யோசிப்பார்கள்.
மெஹரைச் சென்றடைவது மட்டுமே இலக்கென்றுகொண்டவள் நதிமூலம் பற்றியும், கரைசேருமிடம் பற்றியும் யோசிப்பதில்லை.
அவளுக்கு நதியென்பதே ஒரு காலடி அளவுதான்.
அவள் போகும் தூரம்வரை…’
(பயணம் தொடரும்..!)