டெல்லியில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை திடீரென சந்தித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
2020 ஆம் ஆண்டில் நிதிஷ் குமார் தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நம்பர் 2 ஆக இருந்த பிரசாந்த் கிஷோரை பதவி நீக்கம் செய்த பின்னர் முதல் முறையாக இருவரும் தற்போது சந்தித்துள்ளனர், டெல்லியில் பிரசாந்த் கிஷோருடன் நடந்த இரவு உணவு சந்திப்பை நிதிஷ் குமாரும் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், ” இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. நிதீஷ் குமாருக்கு ஓமைக்ரான் தொற்று ஏற்பட்டபோது, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக அவருக்கு போன் செய்து சந்திக்க விருப்பம் தெரிவித்தேன், அந்த விருப்பம் நேற்று நிறைவேறியது” என்று கூறினார்.
மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்த பிரசாந்த் கிஷோர், தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக அல்லாத கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியில் முனைப்புடன் இருக்கிறார்.
தற்போது மம்தா பானர்ஜிக்கும், பிரசாந்த் கிஷோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், பாஜக கூட்டணியுடன் ஆட்சியமைத்துள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை அவர் சந்தித்துள்ளது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
2020 பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பாஜக – ஜக்கிய ஜனதா தளம் கூட்டணியின் சார்பில் நிதிஷ் குமார் ஆட்சியமைத்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM