நெல்லை மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளில் பல சுவாரஸ்யங்கள் நடந்து வருகின்றன. புதிதாக வாக்கு செலுத்தும் இளம் வாக்காளர்கள் ஒருபக்கம் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நிலையில், மூத்த வாக்காளர்களும் அவர்களுக்கு இணையாக உற்சாகமாக வாக்குச் சாவடிக்கு வருகிறார்கள்.
அந்த வகையில், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 101 வயது முதியவர் முண்டன் என்பவர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தார். தனக்கு 101 வயது ஆவதாக அவர் தெரிவித்த நிலையில், அவரது வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் அவருடைய பிறந்தநாள் கணக்குப்படி அவருக்கு 77 வயது மட்டுமே ஆவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல பீமா பீவி என்ற 80 வயது மூதாட்டி வாக்களித்ததிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வாக்களித்த பின்னர் பேசிய முண்டன், “எனக்கு இப்போது 101 வயசாகுது. சீட்டுல ஓட்டைக் குத்துற காலத்துல இருந்தே நான் ஓட்டுப் போடுறேன். முந்தியெல்லாம் எல்லோரும் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வரும் ராத்திரி நேரத்துல நடந்தே வீட்டுக்கு வந்து ஓட்டுக் கேப்பாங்க. இப்போ காருல போயிக்கிட்டே ஓட்டுக் கேட்டு பேசுறாங்க.
இதுவரைக்கும் தவறாம ஓட்டுப்போட்ட நான் இந்த தடவையும் ஓட்டுப் போடணும்னு தான் கஷ்டப்பட்டு நடந்து இங்கே வந்தேன். எனக்கு வயசாவதால் நடக்க முடியலேனாலும் சமாளிச்சு வந்து ஓட்டுப் போட்டுட்டேன். அது சந்தோசமா இருக்கு” என்று உற்சாகமாகப் பேசியபடி வீட்டுக்குச் சென்றார்.
மேலப்பாளையம் 44-வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு 80 வயதான பீமா பீவி என்பவர் வாக்களிக்க வந்தார். ஆனால், அவருக்கு பனிமாதா என்ற மீனாட்சி என்ற பெயரில் வாக்குச்சாவடி சீட்டு வழங்கப்பட்டது. அதில் வயது 36 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்களித்துவிட்டு திரும்பினார்.
அவரிடம் பேசியபோது, தன்னுடைய பெயர் பீமா பீவி என்று உறுதியாகத் தெரிவித்தார். அவருக்கு, தான்போட்ட ஓட்டு தனக்குரியதுதானா அல்லது பிறருக்கு உரியதா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனாலும் வக்களித்து ஜனநாயக கடமையாற்றிய மகிழ்ச்சியில் அவர் திரும்பிச் சென்றார். முதியவர் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.