பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சி அமைக்க முயல்கிறது. பாஜக ஆதரவில் பஞ்சாபில் ஆட்சி செய்த சிரோமணி அகாலி தளம், 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் பிரச்சினையில் பிரிந்தது. தற்போது சிரோமணி அகாலி தளம் தனித்து போட்டியிடுகிறது. ஏற்கெனவே, அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜக.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியால் பஞ்சாபின் 117 தொகுதிகளில் நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
கேஜ்ரிவாலின் ஆசை
டெல்லியில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு தேசிய கட்சியாக உருவெடுக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் கணிசமாக உள்ள சீக்கியர் வாக்குவங்கி பஞ்சாபிலும் உள்ளதால் அங்கும் தொடர்ந்து அந்த கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இந்த முறை பஞ்சாப் தேர்தலில் ஆட்சியமைப்பது ஆம் ஆத்மியின் முக்கிய இலக்காக உள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் நான்கில் வெற்றி பெற்றதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் அரசியல் முக்கியத்துவம் பெற்றது.
கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் 77 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. டெல்லியில் ஆளும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளில் வென்று முதன்முறை எதிர்க்கட்சியானது. இதற்கு முன்பு வரை காங்கிரஸின் எதிர்க்கட்சியாக இருந்த சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) 15 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜக 3 தொகுதிகளிலும் வென்றன. ஒவ்வொரு தேர்தலிலும் ஓரிரு தொகுதிகளுடன் சில பஞ்சாபி கட்சிகளும் பகுஜன் சமாஜ் கட்சியும் (பிஎஸ்பி) தம் அரசியலைத் தொடர்கின்றன.
கருத்துக் கணிப்பு
வெற்றி வாய்ப்புள்ள மாநிலம் என்பதால் அரவிந்த் கேஜ்ரிவாலும் அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பஞ்சாப் மக்கள் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், மத்தியில் ஆளும் பாஜக இருவர் மீதும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக பொதுவாக கூறப்படுகிறது.
சில கருத்துக் கணிப்புகளின் படி ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 117 இடங்களில் 60 முதல் 66 இடங்களில் வென்று பஞ்சாபில் புதிதாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கின்றன. அக்கட்சிக்கு 41% முதல் 42% வாக்கு வங்கி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்ததேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமான சூழல் இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக சிரோண்மணி அகாலிதளம் பலவீனமான நிலையில் உள்ளது. அதன் நீண்டகால கூட்டாளியான பாஜக இந்த தேர்தலில் அதனுடன் இல்லை. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் குழப்பமான சூழலில் காங்கிரஸில் இருந்து வெளியேறியது, அதைத் தொடர்ந்து முதல்வர் யார் என்பது குறித்த சர்ச்சைப்போர் எந்த கட்சியில் நீடித்து வருவதும் ஆம் ஆத்மிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
3 வேளாண் சட்டம்
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு, போதை பழக்கத்திற்கு அதிகமானோர் உயிரிழக்கும் விவகாரம் என்று பல பிரச்சனைகள் உள்ளன. இதனால், கடந்த முறை 77 இடங்களோடு ஆட்சியமைத்த காங்கிரஸ், இந்தமுறை 33 முதல் 39 இடங்கள் மட்டுமே பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
அதுபோலவே கடந்த 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக பஞ்சாப், உ.பி., டெல்லியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர். குறிப்பாக பஞ்சாப் விவசாயிகளே இந்த போராட்டத்தை பெரிய அளவில் முன்னெடுத்தனர்.
அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக கடந்த நவம்பர் 19 இல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இருப்பினும் பஞ்சாப் தேர்தலில் இந்த விவகாரம் பேசும் பொருளாக உள்ளது. இதனால் மத்திய அரசு மற்றும் பாஜக மீதான அதிருப்தி பஞ்சாப் தேர்தலில் எதிரொலிக்கிறது.
முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியுள்ளார். அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜக.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் பாஜக மீதான அதிருப்தியயை அம்ரீந்தர் சிங்கும் சந்திக்கும் சூழல் உள்ளது.
இவை அனைத்தும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரியளவில் வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. அது இப்போதும் தொடர்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆம் ஆத்மியிலும் பல முன்னணி தலைவர்கள் வேறு கட்சிக்கு சென்று விட்டனர். சித்து உட்பட பல முக்கிய தலைவர்கள் வேறு கட்சிக்கு சென்றதால் அதன் அடித்தளம் சற்று வலிமையிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கிராமப்புறம்; நகர்புறம்
பஞ்சாபை பொறுத்தவரையில் கிராமப்புறங்களில் சீக்கிய வாக்காளர்கள் மிகவும் வலிமையானவர்களாகவும், அதேசமயம் நகர்புறங்களில் இந்து வாக்காளர்கள் வலிமையான வாக்கு வங்கியாகவும் திகழ்கின்றனர். இதில் கிராமப்புறங்களில் ஆதரவு தளம் கொண்டு ஆம் ஆத்மியால், நகர்ப்புற இந்து வாக்காளர்களை ஈர்க்க முடியவில்லை. அந்த வாக்குகளை காங்கிரஸும், பாஜகவும் பிரித்துக் கொள்கின்றன. அதுபோலவே கிராமப்புற வாக்குகளை பிரிப்பதில் ஆம் ஆத்மிக்கு சிரோண்மணி அகாலிதளமும் கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளன.
தலித் வாக்கு
தலித் வாக்குகள் பஞ்சாப் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. பஞ்சாபின் 2.77 கோடி மக்கள்தொகையில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தலித்துகள் 32 சதவீதமாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய முதல்வர் சன்னி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டே அவர் மீண்டும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனை சமன் செய்யவும் ஆம் ஆத்மி பகீரத பிரயத்தனம் செய்யும் நிலையில் உள்ளது.
பல ஆண்டுகளாக பஞ்சாப் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாரம்பரிய கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி ஒரு காலத்தில் பார்க்கப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
2017 சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் செய்த தவறில் இருந்து கடுமையான பாடம் கற்றுக்கொண்ட ஆம் ஆத்மி இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டது. அக்கட்சியின் முதல்வர் முகம் இரண்டு முறை மக்களவை உறுப்பினரான பகவந்த் மான் நிறுத்தப்பட்டுள்ளார்.
வெளியேறிய எம்எல்ஏக்கள்
பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மியின் தலைவர்கள் ஆதரவாளர்களும் டெல்லியில் இருந்து கட்சியை நடத்துவதாக மத்திய தலைமையை குற்றம் சாட்டத் தொடங்கியதில் இருந்து அக்கட்சியில் பிரச்சனை தொடங்கியது.
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பான அவதூறு வழக்கை தவிர்ப்பதற்காக அகாலிதள எம்எல்ஏ பிக்ரம் சிங் மஜிதியாவிடம் கேஜ்ரிவால் மன்னிப்புக் கேட்டதை பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர்கள் ஏற்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் சுக்பால் சிங் கைரா தலைமையிலான பெரும்பாலான கட்சி எம்எல்ஏக்கள் கேஜ்ரிவாலுக்கு சவால் விடுத்தனர். அதன்பிறகு ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியேறினர்.
விளைவு, ஆம் ஆத்மியின் ஒன்பது எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறினர். போலாத் எம்எல்ஏ கைரா, ராய்கோட்டில் இருந்து ஜக்தார் சிங் ஜக்கா ஹிசோவால், பதவுரைச் சேர்ந்த பீர்மல் சிங் தௌலா, ஜைது எம்எல்ஏ மாஸ்டர் பல்தேவ் சிங், பதிண்டாவைச் சேர்ந்த ருபிந்தர் கவுர் ரூபி, மௌரி எம்எல்ஏ ஜக்தேவ் சிங் கம்லு, மான்சாவிலிருந்து நாசர் சிங் மன்ஷாஹியா, கராரைச் சேர்ந்த கன்வர் சந்து, டாக்கா எம்எல்ஏ பூல்கா ஆகியோர் வெளியேறி விட்டனர்.இப்போது இவர்கள் வேறுவேறு கட்சியின் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
சரிந்த வாக்கு சதவீதம்
2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி 2019 பொதுத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.
2014- இல் சங்ரூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் தவிர, கட்சியின் மற்ற அனைத்து வேட்பாளர்களும் 2019 இல் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். பஞ்சாபில் ஆம் ஆத்மி வாக்கு விகிதம் 2017 இல் 24.4 இல் இருந்து 2019 இல் 7.4 சதவீதமாக குறைந்துள்ளது.
பிப்ரவரி 2021 இல், பஞ்சாபில் உள்ள 117 மாநகராட்சிகள், எட்டு மாநகராட்சிகள் மற்றும் 109 கவுன்சில்கள் மற்றும் நகர் பஞ்சாயத்து தேர்தல்கள் நடந்தன. மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சிரோண்மணி அகாலிதளம் 2-வது இடத்தை பிடித்தது. ஆம் ஆத்மியின் மறுமலர்ச்சி நம்பிக்கையைத் தகர்த்தது.
அதேசமயம் 2014, 2017 மற்றும் 2019 தேர்தல்களைப் போலல்லாமல் இந்த முறை பஞ்சாப் வாக்காளர்கள் ஆத்மியை வேறு வடிவில் பார்க்கின்றனர். ஆனால் அது தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா என்பது முடிவ வெளியாகும்போதே தெரிய வரும்.