மகாராஷ்டிராவில் பயணிகள் மகிழ்ச்சி: மத்திய ரயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரயில்

மும்பை: மகாராஷ்டிராவில் மத்திய ரயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்திய ரயில்வேயில் மின்சார ரயில்கள் காலை, இரவு நேரங்களில் அதிக கூட்ட நெரிசலுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகளின் வசதிக்காக மத்திய ரயில்வே, மெயின் வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தானே – திவா இடையே 5, 6-வது வழிப்பாதையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இதையடுத்து கூடுதல் ரயில் சேவையை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. புதிய சேவைகள் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தின் மத்திய ரயில்வே மெயின் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை 894 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக துறைமுகம், டிரான்ஸ் ஹார்பர் மற்றும் மெயின் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை 1,774ல் இருந்து 1,810 ஆக அதிகரித்துள்ளது.இதேபோல ஏ.சி. மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கையும் 10-ல் இருந்து 44 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 25 சேவைகள் விரைவு ரயிலாக இயக்கப்பட உள்ளது. கூடுதலாக இயக்கப்படும் ரயில் சேவைகள் அடங்கிய கால அட்டவணையை பயணிகள் இந்திய ரயில்வே இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை மத்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.