பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மதுபானி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரயிலின் 5 பெட்டிகளில் தீ கொளுந்துவிட்டு எரியும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெருமளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் திடீரென தீப்பற்றி எறிந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என
கிழக்கு மத்திய ரயில்வே
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், காலி ரயிலில் காலை 9.13 மணிக்கு ஏற்பட்ட தீ 9.50 மணியளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அரசு ரயில்வே போலீசார், ரயில் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த தீ விபத்து சம்பவத்தை ரயில்வே நிர்வாகம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.