மத்திய மந்திரி எல்.முருகனின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டார்கள்- அண்ணாமலை தகவல்

சென்னை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்கை பதிவு செய்தனர். மதியம் வரை வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. 1 மணி நிலவரப்படி 35.34 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின்னர் வாக்குப்பதிவு சற்று விறுவிறுப்படைந்தது.
ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆளுங்கட்சியினர் இன்றும் பணப்பட்டுவாடா செய்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணாநகர் வாக்குச்சாவடியில் மத்திய மந்திரி  எல்.முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
“அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம் செய்கின்றனர். ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது. மத்திய மந்திரி எல்.முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?’’ என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.