மும்பை: மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
மும்பை புறநகர் ரயில் தடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கூடுதல் ரயில் பாதைகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். இதற்காக அவர் தானே மற்றும் திவா நிலையங்களுக்கு இடையே உள்ள மின்சார ரயிலில் பயணிகளுடன் சேர்ந்து பயணம் செய்தார். தானே மற்றும் திவாவை இணைக்கும் புதிய ரயில் பாதைகளை நேற்று பிற்பகல் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில், அதற்கு முன்னதாக மதியம் 1 மணியளவில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதே ரயில் பாதையில் ரயிலில் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
தானே ரயில் நிலையத்தில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஏறிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், திவா ரயில் நிலையம் வரை ரயிலில் பயணித்தார். அப்போது மின்சார ரயிலில் உள்ள நிறை, குறைகளை சக பயணிகளிடம் கேட்டறிந்தார். மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே, ரயில்வே வாரிய தலைவர் வி கே திரிபாதி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். திவா ரயில் நிலையத்தில் நடந்த சிறிய அளவிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சிறப்பு ஆய்வுப் பெட்டியில் தானே திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் தானே ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள ஒரு சாலையோர கடையில் டீ குடித்த அமைச்சர் வைஷ்ணவ், அங்கேயே மகாராஷ்டிராவின் பிரபல சிற்றுண்டியான ‘வடா பாவ்’ சாப்பிட்டார். மிகவும் எளிமையாக மத்திய ரயில்வே அமைச்சர் நேரடியாக ரயில் நிலையத்திற்கு வந்ததால் கூட்டம் சேர்ந்து சரியான நேரத்துக்கு ரயில்களை பிடிக்க முடியவில்லை என்று பயணிகள் சிலர் குற்றம்சாட்டினர். என்றாலும், அமைச்சரின் எளிய அணுகுமுறை பலரைக் கவர்ந்தது.
– பிடிஐ