லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் அவரது மருமகள் அபர்ணா யாதவுக்கே என பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.
உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் தற்போது நடந்து வருகிறது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 2 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ளது. 3-ம் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உ.பி. முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியை வைத்து உ.பி.யில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா கூறியது: முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இதயப்பூர்வமாக இல்லை. அவரது ஆசிகள் அவரது மருமகள் கட்சிக்கு உண்டு. யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுக்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தபோது, அங்கு பிரச்சாரம் செய்ய செல்லமாட்டேன். பிரச்சாரம் செய்யாமல் வெற்றி பெறுவேன் எனக் கூறினார்.
ஆனால் இன்று அவர்களின் நிலை என்னவென்றால், அகிலேஷ் முலாயம் சிங் யாதவையும் தன்னுடன் பிரச்சாரம் செய்ய அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இதயப்பூர்வமாக இல்லை. அவரது ஆசிகள் அவரது மருமகள் கட்சிக்கு உண்டு.
அகிலேஷால் சரியாக நடத்தப்படாத முலாயம் சிங் யாதவ் ஆத்மார்த்தமாக சமாஜ்வாதி கட்சியில் இல்லை. அதேசமயம் முலாயம் சிங் யாதவின் ஆசிகள் அவரது மருமகள் அபர்ணா யாதவ் தற்போதுள்ள பாஜகவுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதியில் முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு திரட்டியது குறிப்பிடத்தக்கது.