இருசக்கர வாகனம் வாங்குவது என்பது பெரும்பாலான இந்தியர்களின் கனவு. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் இருசக்கர வாகனத்தோடு நம்மால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். சின்ன வயதில் டிவிஎஸ் 50 -ன் கம்பியைப் பற்றியவாறு அப்பாவோடு பயணித்தது தொடங்கி தன் காதலியைப் பின் இருக்கையில் அமரச் செய்து ஒட்டிச் செல்வது வரை… சினிமா காட்சிகள் யோசித்தால்கூட ஒரு இருசக்கர வாகனம் இன்றி காட்சி இருக்காது. அப்படியான இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கு நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம்? அஸாம் மாநிலம் பர்பேட்டாவைச் சேர்ந்த காய்கறி விற்பவர் ஹபிஸுர் அகாண்ட் செய்தது பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
அவருக்கு ஒரு ஆசை இருந்தது. இருசக்கர வாகனம் ஒன்றைச் சொந்தமாக வாங்கிவிட வேண்டும். அதற்காக சிறுக சிறுக சில்லறைகளாகச் சேர்த்து வைத்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகன விற்பனையாளர்களை அணுகி தனது வண்டி வாங்கும் ஆசையையும் தான் சேர்த்து வைத்திருக்கும் சில்லறைகளைப் பற்றியும் கூறியிருக்கிறார். விற்பனையாளர்கள் ஓகே சொல்லவே ஒரு சாக்கு நிறைய நாணயங்களை அள்ளி வந்திருக்கிறார் ஹபிஸுர். அவர் கொண்டு வந்த சில்லறைகளை எண்ணவே இரண்டிலிருந்து மூன்று மணிநேரம் வரை ஆகியிருக்கிறது. மொத்தமாக அந்தப் பையில் இருந்த சில்லறைகள் ரூபாய் 22,000. இது அவரின் நீண்ட கால சேமிப்பு. மீதி பணத்திற்கு தவணை ஏற்பாடு செய்து தருவதாக ஷோரூம் நிர்வாகத்தினர் சொல்லவே ஹபிஸுர் தன் கனவை நிறைவேற்றிவிட்டார். ஹபிஸுர் ஹேப்பி அண்ணாச்சி!