சமகால இளைய தலைமுறையினர், கமல்ஹாசனின் சினிமா கிராஃபை எத்தனை தூரம் பின்பற்றியிருப்பார்கள் என்று தெரியவில்லை. அந்த வரிசையின் கடைசியில் உள்ள தசாவதாரம், விஸ்வரூபம் போன்றவற்றைப் பலர் பார்த்திருக்கலாம். இன்னும் சிலர் முன்னே சென்று ‘ஹேராம்’ போன்ற கிளாசிக் படங்களைப் பார்த்திருக்கலாம்.
ஆனால், கமல் என்னும் கலைஞனின் முழுமையான பரிமாணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரின் திரைப்பயணத்தில் உள்ள மிகச்சிறந்த திரைப்படங்கள் அனைத்தையும் அவர்கள் பார்த்தாக வேண்டும். அப்போது கூட முழுமையாகப் பார்க்க முடியமா என்று தெரியவில்லை. அதன் விஸ்தீரணம் அப்படி.
இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமே அப்படியான பின்னோக்கிய பயணத்தின் முக்கியத்துவத்தை இளம்தலைமுறை பார்வையாளர்களுக்கு துளியாவது அறிமுகப்படுத்துவதுதான்.
கமல்ஹாசனின் திரைப்பட வரிசையில் மிக முக்கியமான திரைப்படம் ‘மூன்றாம் பிறை’.
கமல் மட்டுமல்ல, ஸ்ரீதேவி என்கிற நடிப்புப் பிசாசையும் அறிந்து கொள்ள இந்தப் படத்தை நீங்கள் கட்டாயம் பார்த்தாக வேண்டும். ஏனெனில், ஒரு காலகட்டத்திற்குப் பின் அவர் இந்தியில் நடிக்கப் போய் விட்டதால் இளம் தலைமுறையினருக்கு இவரின் பரிச்சயம் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் இந்திக்குச் சென்று தேசிய நடிகையாகப் புகழ்பெற்றது, நமக்கெல்லாம் பெருமைதான் என்றாலும் ஒருவகையில் நமக்கு அது இழப்பே.
சில நடிகைகள் மிக அழகாக இருப்பார்கள். ஆனால், நடிப்பு சுமாராகத்தான் வரும். சிலர் அற்புதமான நடிகைகளாக இருப்பார்கள். ஆனால், தோற்றம் சுமாராகத்தான் இருக்கும். ஆனால் அழகு + திறமை ஆகிய இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற பிரத்யேகமான நடிகைகளுள் ஸ்ரீதேவி முக்கியமானவர்.
‘மூன்றாம் பிறை’ திரைப்படத்திற்காக ‘சிறந்த நடிகர்’ பிரிவில் கமல்ஹாசனுக்கும் ‘சிறந்த ஒளிப்பதிவாளர்’ பிரிவில் பாலுமகேந்திராவிற்கும் தேசிய விருது கிடைத்தது. ஆனால், ஸ்ரீதேவிக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்பதே பலரின் ஆதங்கமாக இருந்தது.
அந்தளவிற்கு அவர் தன் திரைப்பயணத்தில் மிகச் சிறந்த நடிப்பை தந்த படம் இது. அதிலும் கமல்ஹாசன் போன்றதொரு நடிப்பு ராட்சசன் இருந்தும் அவர் தனிப்பட்ட வகையில் பிரகாசித்ததை ஒரு சாதனை என்றே சொல்லலாம்.
இந்த இரண்டு அசாதாரணமான நடிகர்களையும் திறம்படவும் யதார்த்தமாகவும் பயன்படுத்திக் கொண்ட இயக்குநர் பாலுமகேந்திராவை ஸ்பெஷலாக குறிப்பிட வேண்டும். ஒப்பனையில்லாத நடிகர்களை, இயற்கையான ஒளியில் அற்புதமான கதை அம்சங்களின் பின்னணியில் படம் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் மனிதனின் ஆதாரமான உணர்வுகளைக் கிளறும் யதார்த்த படைப்புகளையும் தந்தவர்.
தமிழ் சினிமாவில் 80-களில் உருவான புதிய அலை திரைப்படங்களின் பிதாமகர் என்றே பாலுமகேந்திராவைச் சொல்ல வேண்டும்.
ஷோபாவின் தற்கொலை விஷயத்தைப் பற்றி ‘மூடுபனி’ திரைப்படம் பற்றிய கட்டுரையில் விரிவாகப் பார்த்திருக்கிறோம். 17 வயது ஷோபாவிற்கும் பாலுமகேந்திராவிற்கும் இருந்த உறவு பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அது அவர்களுக்குள் இருந்த அந்நியோன்யமான விஷயம். அவர்களால் மட்டுமே அதைப் புரிந்துகொள்ள முடியும்.
”தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்துபோன அந்த தேவதையைப் பற்றி என்ன எழுதுவது?” என்று ஷோபாவின் மரணத்தின் போது ஒரு குறிப்பில் எழுதுகிறார் பாலுமகேந்திரா.
ஓர் ஓவியன் தன் மனத்தவிப்பை ஓவியம் வரைந்துதான் தீர்க்க முடியும். ஓர் எழுத்தாளன் தன் அகப்பிரச்சினையை எழுதித்தான் கடந்து வர முடியும். இதைப் போலவே ஷோபாவின் பிரிவை தனக்குத் தெரிந்த திரைமொழியில் ஒரு சினிமாவாக எடுத்து அந்த துயரத்தை பதிவு செய்ய விரும்பியிருக்கிறார் பாலுமகேந்திரா. அதன் விளைவுதான் ‘மூன்றாம் பிறை’ என்கிற அற்புதமான திரைப்படம்.
‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தின் கதையை இப்படிச் சொல்லிப் பார்க்கலாம்.
‘சிறகொடிந்த பறவை ஒன்று ஒருவனிடம் அடைக்கலமாக வந்து சேர்ந்தது. பரிவும் பரிதாபமும் உந்த, பாசத்தைக் கொட்டி அந்தப் பறவையை அவன் பராமரித்து வந்தான். வார்த்தைகளால் விளக்க முடியாத, மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத நேசமொன்று அவர்களுக்குள் மெல்ல மெல்ல வளர்ந்தது.
ஆனால், சிறகு சரியான பிறகு, அந்தப் பறவை புறப்படும் தருணம் ஒருநாள் வந்தது. பிரிவுத் துயரம் ஒரு புறம். அதைவிடவும் அந்தப் பறவைக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்கிற உணர்வே அவனை அதிகம் வதைத்தது’.
ஓர் இளம் பெண் விபத்தில் சிக்குகிறாள். அவளுடைய நினைவுகள் தற்காலிகமாக அழிந்துபோகின்றன. 6 வயது வரைக்குமான நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனவே, உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் அவள் ஒரு சிறுமிதான். இப்படியொரு குழந்தையை பாலியல் விடுதியிலிருந்து மீட்டெடுக்கிறான் ஓர் இளைஞன். தன்னுடனே வைத்து பராமரிக்கிறான். தாயுமானவனாகவும் மாறி அவளைச் சீராட்டுகிறான்.
ஆனால், இவனுடைய முயற்சியில் ஒரு நாள் அவளுக்கு பழைய நினைவுகள் திரும்புகின்றன. துரதிர்ஷ்டவசமாக இவன் அப்போது அருகில் இருக்க முடியாத சூழல். கடைசி முறையாக இவளைப் பார்த்து விட முடியாதா என்று ஓடி வந்து கீழே விழுந்து அடிபட்டு ரயில் நிலையத்திற்கு வருகிறான். ஆனால், அவளால் இவனை அடையாளம் காணவே முடியவில்லை.
“விஜி… சீனு… விஜி…” என்று முன்னர் குரங்கு போல் பாவனை செய்து அவளை சிரிக்க வைத்த சேஷ்டைகளை இப்போதும் செய்து காட்டுகிறான். ம்ஹூம்… அத்தனையும் வீண். ‘விஜி’ என்கிற அவனுடைய தோழி, நினைவு திரும்பி ‘பாக்யலஷ்மி’யாக திரும்பிப் போவதை அவனால் தடுக்க முடியவில்லை.
அழுகையும் துயரமுமாக கிளம்பிச் செல்லும் ரயிலின் பின்னாடியே ஓடி வந்து இரும்புத் தூணில் கமல் முட்டிக்கொண்டு கீழே விழும் போது அவருக்கு வலித்ததோ… இல்லையோ… பார்வையாளர்களுக்கு அத்தனை வலித்தது. இந்தியச் சினிமாவின் மிகச் சிறந்த கிளைமாக்ஸ்களைக் கணக்கெடுத்தால் அதில் ‘மூன்றாம் பிறை’ உத்தரவாதமாக இடம் பெறும்.
கிரிக்கெட் ஆட்டத்தில் ஒருவர் எதிரணியிடம் நீண்ட நேரம் தாக்குப் பிடித்து அதிக ரன்களை எடுத்து அவுட் ஆகியிருப்பார். ஆனால், பரபரப்பான இறுதி ஓவரில் ஒருவர் வந்து அட்டகாசமாக ஆடி மேட்ச்சை வென்று தருவார். பார்வையாளர்களின் கவனம் முழுவதும் இவர் மீது வந்து விழுந்துவிடும். இதிலும் அப்படியே!
படம் முழுக்க ஸ்ரீதேவி அபாரமாக ஸ்கோர் செய்திருப்பார். கமலும் சிறப்பாகவே நடித்திருப்பார். ஆனால் கிளைமாக்ஸில் கமல் வெளிப்படுத்திய இந்த அசுரத்தனமான நடிப்பு அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்துவிட்டது.
‘உடலால் இளம்பெண், உள்ளத்தால் 6 வயது சிறுமி’ – இப்படியொரு விநோதமான பாத்திரத்தை ஸ்ரீதேவியைத் தவிர வேறு யாராவது திறம்பட கையாண்டிருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஸ்ரீதேவிக்கு இயல்பிலேயே களங்கமற்ற முகமும் உடல்மொழியும் இருந்ததால் இது சாத்தியமாயிற்று.
இந்தப் படத்திலிருந்து ஓர் உதாரணக்காட்சி. கமல் தந்த புடவையை ஸ்ரீதேவி கட்டிக்கொண்டு வர வேண்டும். கமலின் மனக்கண்ணில் ஒரு காட்சி வரும். அதில் புடவை விளம்பரத்தில் வருவது போல் மிக நேர்த்தியான ஒப்பனையுடன் புடவையை கச்சிதமாக கட்டிக் கொண்டு வரும் ஸ்ரீதேவியை மலைப்புடன் பார்ப்பார் கமல். கண்களில் ரொமான்ஸ் பொங்கும்.
ஆனால், சிறிது நேரத்திலேயே அது தன் பகல் கனவு என்று தெரிந்து விடும். அடுத்த காட்சியில் ‘பப்பரப்பே’ என்று புடவையை கன்னாபின்னாவென்று தன் உடல் மீது சுற்றிக் குழந்தைத்தனமாக நிற்பார் ஸ்ரீதேவி.
இந்த சிறிய காட்சிக் கோர்வையில் இரண்டு விதமாகவும் ஸ்ரீதேவி தந்திருக்கும் நடிப்பை மட்டும் பார்த்தாலே போதும், இந்தப் படத்திற்கு அவரை விட்டால் வேறு எவரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று எவருக்கும் தோன்றிவிடும்.
உடல் ரீதியாக வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் அதில் ஒரு சிறுமியின் உடல்மொழியை வெளிப்படுத்துவது அத்தனை எளிதான விஷயமல்ல. அடக்கி வாசித்தால் சரியாக வராது. மிகையாகச் சென்றால் ‘ஓவர் ஆக்ட்’ ஆகி கதாபாத்திரமே செத்து விடும்.
இந்த இரண்டிற்கும் இடையில் ஓர் ஆறு வயது சிறுமியின் உடல்மொழியை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதேவி. பாலியல் விடுதியில் இவரைச் சந்திக்கும் கமல், “வீடு எங்க?” என்று விசாரிக்கும்போது “கோயில் பக்கத்துல… குளம் இருக்கும்.. புறால்லாம் இருக்கும்.. கைத்தட்டினா பறந்து போயிடும்” என்று மலங்க மலங்க விழித்து திக்கித் திணறி வீட்டிற்கு வழி சொல்லும் காட்சி அத்தனை அழகு. அதில் ஒரு குழந்தையை மட்டுமே நம்மால் காண முடியும்.
போலவே கமலுடன் ஊட்டியில் ரயிலில் வந்து இறங்கிய பிறகு… திறந்திருக்கும் கம்பார்ட்மென்ட்டின் கதவுகளை வரிசையாக இவர் மூடிக்கொண்டே வருவது சிறார்களுக்கே உள்ள குணாதிசயம். இதை அழகாக வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதேவி.
இப்படி அந்தப் பாத்திரத்திற்கேற்ற பல நுண்விவரங்களை இயக்குநர் யோசித்து காட்சியில் வைத்திருந்தாலும், இயல்பு கெடாதவாறு அதை வெளிப்படுத்திய ஸ்ரீதேவிக்கு எத்தனை விருது கொடுத்தாலும் தகும். கைவிரலை சூப்பிக் கொண்டு ஸ்ரீதேவி தூங்கும் ஒரு க்ளோசப் காட்சியில், ஒரு குழந்தையைப் போலவே அவரை நம்மால் உணர முடியும்.
ஸ்ரீதேவி ஒருபுறம் இப்படி கலக்கிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் அவரை ஓவர் டேக் செய்ய முயன்று கொண்டேயிருப்பார் கமல். ஸ்ரீதேவியைக் காணாமல் ஊர் பூராவும் தேடும் காட்சி ஒன்றே போதும். எங்கும் காணாமல் துயரத்துடன் அவர் வீட்டில் நுழையும் போது, போர்வையை போர்த்திக்கொண்டு திருவிழாவில் காணாமல்போன சிறுமி மாதிரி மலங்க மலங்க விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பார் ஸ்ரீதேவி. அதைக் கண்டதும் கமலின் முகத்தில் தோன்றும் பாவங்கள் அத்தனை அட்டகாசமாக இருக்கும். “சீனு….” என்று அழைத்தபடி கமலை ஓடி வந்து கட்டிக் கொள்வார் ஸ்ரீதேவி. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரீதேவியிடம் மேலதிக பாசத்தைக் காட்டுவார் கமல்.
சின்ன சின்ன அசைவுகள், முகபாவங்கள் போன்ற மெனக்கெடல்களைத் தந்து ஒரு காட்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதில் கமல் வல்லவர். இயக்குநர் சொல்லாத நிலையில் தானாகவே யோசித்து தன் உழைப்பைக் கொட்டுவார். இதிலும் குரங்கு போல் மேலே இருந்து குதிப்பது, பல்ட்டி அடிப்பது, ஒரு நாற்காலியில் இருந்து இன்னொன்றிற்கு தாவுவது போன்ற விஷயங்களை மிக அநாயசமாக செய்வார். உடலை இதற்காக தயார் செய்து வைத்திருந்தால்தான் இது சாத்தியமாகும். க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் மலைச்சரிவுகளில் இருந்து வேகமாக இறங்கி, காரில் அடிபட்டு, சகதியில் விழும் காட்சிகள் எல்லாம் அத்தனை இயல்பாக இருக்கும்.
இந்த இரு பிரதான பாத்திரங்களைத் தவிர இன்னொரு சுவாரஸ்யமான பாத்திரமும் உண்டு. ஆம்.. ‘ச்சுப்பிரமணி… ச்சுப்பிரமணிக்குட்டி’ என்று வாய்க்கு வாய் ஸ்ரீதேவி அழைக்கும் ஒரு நாய்க்குட்டி. ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தின் பார்வையாளர்கள் பெரும்பான்மையோரால் மறக்க முடியாத பெயர் இந்த ‘‘ச்சுப்பிரமணி’… கீச்சென்ற குரலில் அத்தனை அழகாக கூப்பிடுவார் ஸ்ரீதேவி.
இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய பாத்திரம் ‘சில்க்’ ஸ்மிதா. கமல் பணிபுரியும் பள்ளியின் முதலாளியின் இரண்டாம் தாரமாக இருப்பார். கமலும் ஸ்மிதாவும் கவர்ச்சியாக நடனமாடும் ‘பொன்மேனி உருகுதே’ பாடல், இந்தத் திரைப்படத்திற்கு அநாவசியமானதொன்று என்று நினைக்கிறேன். படத்தின் களங்கமற்ற தன்மையில் கறை பட்டது போல் இருக்கும். இந்தப் பாடல் வணிக அம்சத்திற்காக இணைக்கப்பட்டது என்பது அப்பட்டமாக தெரியும். பின்னாட்களில் பாலுமகேந்திராவும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
வயதான கணவர் என்பதால் தீராத காமத்துடன் ஸ்மிதா, கமல்ஹாசனுக்கு தூண்டில் இடுவது போல் சில காட்சிகள் அமைந்திருக்கும். கவர்ச்சியான பாத்திரம் என்றாலும் கூட இதையும் ஒருவித தனித்தன்மையுடன் படைத்திருப்பார் இயக்குநர்.
‘நான் எண்ணியது எதுவும் என் வாழ்க்கையில் நடக்கவில்லை’ என்கிற ஆதங்கத்தை கமலிடம் வெளிப்படுத்துவார் ஸ்மிதா. அப்போது ‘‘ ‘ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?’ என்றேன்; ‘நானிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்’ என்றாள்” என்கிற பாரதியின் பாடலை மேற்கோள் காட்டுவார் ஸ்மிதா. இவருடைய நோக்கில் இவருடைய வாழ்க்கையும் பரிதாபகரமானதுதானே?
ஆனால், இந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டதற்கு ஒரு நுட்பமான காரணம் உண்டு என்பதை உணர முடியும். உள்ளத்தால் குழந்தையென்றாலும் உடலால் ஸ்ரீதேவி ஓர் இளம்பெண். கமலுடன் அவர் தங்கும்போது கமலுக்கு தன்னிச்சையாக தவறான எண்ணம் ஏதும் தோன்றியிருக்குமோ என்று பார்வையாளர்கள் சந்தேகப்பட வாய்ப்புண்டு. எனவே, கமலை ‘நேர்மையானவர், எளிதில் சபலத்திற்கு ஆளாகாதவர்’ என்பதை நிறுவ, ஸ்மிதாவின் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடியும்.
ஆனால், ஒரு காட்சியில் ஸ்மிதாவின் அழைப்பை மறுத்த கமல், ‘உங்க கணவரோட உப்பைச் சாப்பிட்டிருக்கேன்’ என்று வசனம் பேசுவது சற்று நெருடல். எனில் கமலுக்கு அது மட்டும்தான் பிரச்னையா என்று தோன்றிவிடும்.
கவர்ச்சிக்காகத்தான் ஸ்மிதாவின் பாத்திரம் இணைக்கப்பட்டது என்றாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பார் ஸ்மிதா. “…ச்சீனு…” என்று ஸ்ரீதேவி, கமலை அழைப்பது குழந்தைத்தனமாக இருக்கும் என்றால் இவரும் ‘ச்சீனு..’ என்று கமலை கிறக்கத்துடன் அழைப்பது அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். (ஸ்மிதாவிற்கு டப்பிங் குரல் தந்தவர் அனுராதா).
“பகவானே… என்ன சோதனை இதெல்லாம்” என்று புலம்பும் மிடில் கிளாஸ் ஆசாமியாகத்தான் பெரும்பான்மையான திரைப்படங்களில் பூர்ணம் விஸ்வநாதனை கண்டிருப்போம். அவர் இதில் ஸ்மிதாவின் கணவராக வருவார். சட்டையைக் கழற்றி விட்டு முகத்தில் மோகம் பொங்க ஸ்மிதாவின் கவுன் ஜிப்பை இவர் கழற்றும் போது நமக்கு அறிமுகமில்லாத ‘வேறொரு ஆசாமியைப்’ பார்ப்பது போல விநோதமாக இருக்கும். (‘பகவானே.. இது என்ன சோதனை!” என்று மனதில் நினைத்திருப்பார் பூர்ணம்.)
“நான் இசையமைக்கும் பாடல்களை எனக்கு திருப்தியாக தோன்றும் வகையில் படமாக்குபவர்கள் இருவர்தான். ஒருவர் பாலுமகேந்திரா.. இன்னொருவர் மணிரத்னம்.. என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் இளையராஜா. பாலுமகேந்திராவிற்கும் இளையராஜாவிற்கும் இடையே உள்ள நட்பு என்பது மிக அழகானது. அதிகம் விளக்கப்படாமலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இயங்கினார்கள். சில அரிய விதிவிலக்குகளைத் தவிர தான் இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்களில் இளையராஜாவை மட்டுமே இசையமைப்பாளராகப் பயன்படுத்தினார் பாலுமகேந்திரா.
இளையராஜா இதர இயக்குநர்களின் படங்களில் பின்னணி அமைக்கும் விதத்திற்கும் பாலுமகேந்திராவின் படங்களில் உள்ள விதத்திற்கும் நிறைய வேறுபாடு இருப்பதை காண முடியும். பாலுமகேந்திராவின் படங்களில் நிறைய காட்சிகளை அர்த்தபூர்வமான மெளனத்தால் நிறைத்திருப்பார் இளையராஜா. இந்த நோக்கில் பாலுமகேந்திராவின் ரசனையையும் எதிர்பார்ப்பையும் நன்கு அறிந்தவர் அவர். துவக்க காலத்தில் இது குறித்து இருவருக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடந்ததுண்டு.
‘மூன்றாம் பிறை’ படத்தின் ஆல்பத்தில் ஐந்து பாடல்கள் உண்டு. இதன் ஆல்பம் என்றாலே பலருக்கும் உடனே நினைவிற்கு வருவது ‘கண்ணே.. கலைமானே’ பாடல்தான். கேட்கும் ஒவ்வொரு முறையும் மனதை உருக வைக்கும் தாலாட்டுப் பாடல் இது. இதை மேடையில் பாடும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் விடுவார் பிரபல பாடகர் உஷா உதூப். தனது பிரத்யேகமான கந்தர்வ கான குரலில் பாடி நெகிழ வைத்து விடுவார் ஜேசுதாஸ்.
அடுத்த பாடல் ‘பூங்காற்று புதிரானது’. இதுவும் கண்ணதாசன் எழுதியதுதான். பாலுமகேந்திராவின் பிரத்யேகமான ‘மாண்டேஜ் ஷாட்களின்’ மூலம் கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையேயான நேசம் வளர்ந்து வருவது கவிதைத்தனமாக சொல்லப்பட்டிருக்கும்.
இந்த ஆல்பத்தின் இன்னொரு ‘க்யூட்டான’ பாடல் ‘வானெங்கும் தங்க விண்மீன்கள்’… இன்றைக்கு கேட்டாலும் புத்துணர்ச்சியை அடையும் படி நவீன பாணியில் இசையமைத்திருப்பார் இளையராஜா. படத்தின் துவக்கத்தில் வரும் பாடல் இது. இதன் இறுதியில் நடக்கும் விபத்து காரணமாகத்தான் ஸ்ரீதேவி பழைய நினைவுகளை இழப்பார். இந்தப் பாடலின் ஒரு காட்சியில் ஸ்ரீதேவி நளினமாக நடந்து வருவதைப் பார்க்க அத்தனை அட்டகாசமாக இருக்கும். இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து. எஸ்.பி.பியும் ஜானகியும் அருமையாகப் பாடியிருப்பார்கள்.
ஸ்ரீதேவிக்கு கமல் ‘நரிக்கதை’ சொல்வது போல் ஒரு பாடல் அமைந்திருக்கிறது. இதை அவர்களே பேசி, பாடி நடித்திருந்தது ஒரு புதுமையான அம்சம்.
‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தின் நாயகியாக நடிக்க முதலில் ஸ்ரீப்ரியா அணுகப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. ஸ்ரீப்ரியாவும் திறமையான நடிகைதான் என்றாலும் ஸ்ரீதேவியின் அளவிற்கு உயரத்தை எட்டியிருக்க முடியுமா என்கிற சந்தேகம் எனக்கு உண்டு.
இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் டிசைன்களை வடிவமைத்தவர்களுள் ஒருவர் கதிரேசன். டைட்டில் கார்டில் இந்தப் பெயரைப் பார்க்கலாம். திரைத்துறைக்குள் இவர் நுழைந்ததே ஓவியராகத்தான். இவர்தான் பின்னாளில் ‘இதயம்’ ‘காதல் தேசம்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ‘கதிர்’.
ஒரு திரைப்படத்தின் சில காட்சிகளை மட்டுமே பார்த்தால் போதும். அது பாலுமகேந்திராவால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு அவரின் முத்திரை ஒவ்வொரு பிரேமிலும் அழுத்தமாக பதிந்திருக்கும்.
மிக மிக நிதானமான அசைவுகள், இயற்கையான ஒளியின் பின்னணியில் பிரகாசிக்கும் நடிகர்களின் முகபாவங்கள், சம்பந்தப்பட்ட நிலப்பரப்பிற்கு தரப்படும் முக்கியத்துவம், அதில் வெளிப்படும் அழகியல் என்று ‘மூன்றாம் பிறை’யின் பெரும்பாலான காட்சிகள் பார்ப்பதற்கு மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கும். அதிலும் இந்தப் படத்தின் காட்சிகள் நிகழ்வது பாலுமகேந்திராவிற்கு பிடித்தமான ‘ஊட்டி’ என்பதால் அந்த நிலப்பரப்பு கூடுதல் வசீகரத்துடன் பதிவாகியிருக்கும்.
கமல், ஸ்ரீதேவி மீது காட்டுவது ஒரு குழந்தையின் மீது காட்டும் பாசம்தானா, அல்லது அதையும் மீறிய உணர்வா என்பது மிக நுட்பமாக சில காட்சிகளில் பதிவாகியிருக்கும். கத்தி மீது நடக்கும் விளையாட்டு போன்றது இது. இந்த விஷயத்தை மிக லாகவமாக கையாண்டிருப்பார் பாலுமகேந்திரா.
‘காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன், கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்’ என்று கண்ணதாசன் எழுதிய வரிகளின் மூலமாக சிலவற்றை உணர முடியும். போலவே புடவையை மிக நேர்த்தியாக கட்டி வரும் ஸ்ரீதேவியை கமல் பார்க்கும் காட்சியில் காதல் தெரியும். அதிலும் சிலவற்றை உணர முடியும்.
இன்னொரு காட்சியில், கமலின் பக்கத்து வீட்டில் இருக்கும் பாட்டி “ஏம்ப்பா.. இப்படி ஒரு வயசுப் பொண்ணைக் கூட்டிட்டு வந்துட்டியே.. ஊர் உலகம் என்னப்பா சொல்லும்?” என்று ஒரு எதார்த்தமான கேள்வியைக் கேட்பார். “ஊரு கெடக்கு பாட்டி..” என்று சொல்லும் கமல்ஹாசன் ‘என்னமோ தெரில பாட்டி.. பார்த்தவுடனே.. எனக்கு ‘அவ’தான்னு தோணுச்சு’ என்பார். சில காட்சிகள் மட்டுமே வந்தால் பக்கத்து வீட்டுப் பாட்டி நம்மை மிகவும் கவர்ந்து விடுவார்.
இந்தப் படத்தில் சித்திரிக்கப்படும் கமல் – ஸ்ரீதேவி உறவை வில்லங்கமாக உளப்பகுப்பாய்வு செய்து விமர்சனம் எழுதியவர்களும் உண்டு. போலவே இதை இயக்குநரின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி கடுமையாக சாடியவர்களும் உண்டு. விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவைதான். அவையும் ஒரு படைப்பின் அங்கம்தான்.
ஆனால், சில கவிதையான தருணங்களும் உறவுகளும் தன்னிச்சையாக பூக்கும் மலர்களைப் போன்றவை. சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்றவரால் அவற்றை முழுக்க புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியாது. ஒருவர் நுண்ணுணர்வுடன் அவற்றைப் புரிந்து கொள்ள முயலலாம். ஆனால் அந்தப் பூக்களை ஒவ்வொரு இதழாக பிய்த்து எறிந்து ஆராய்வது அத்தனை ரசனையான விஷயமல்ல.
சென்னையில் உள்ள பாலியல் விடுதியிலிருந்து ஸ்ரீதேவியை மீட்டெடுத்த கமல், அப்போதே அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கலாமே, ஏன் ஊட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டும், போலவே ஸ்ரீதேவியை அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்க ஏன் அவர் எந்தவொரு முயற்சியும் செய்வதில்லை? இறுதிக்காட்சியில் ஸ்ரீதேவியின் பெற்றோரும் போலீஸாரும் வரும்போது ஏன் குற்றவாளி போல மறைந்திருக்க வேண்டும்? பெற்றோருடன் ஸ்ரீதேவி இணைவதில் கமலுக்கு மகிழ்ச்சியில்லையா, தன்னுடையே உடமைப் பொருளாக வைத்திருக்க நினைத்தாரா… என்று பல லாஜிக் கேள்விகள் உள்ளுக்குள் எழும்பினாலும், தனது அபாரமான திரைக்கதையினால் அத்தனையையும் மறக்கடித்தார் பாலுமகேந்திரா.
சிறந்த நடிகர் (கமல்), சிறந்த ஒளிப்பதிவாளர் (பாலுமகேந்திரா) என்று இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம், தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வென்றது. ‘வசந்த கோகிலா’ என்கிற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இதை இந்தியில் ‘சத்மா’ என்கிற தலைப்பில் 1983-ல் ரீமேக் செய்தார் பாலுமகேந்திரா. ஆனால், இந்தியில் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
80-களில் வெளியான அதிசிறந்த திரைப்படங்களைப் பட்டியலிட்டால் அதில் ‘மூன்றாம் பிறை’ மிக உறுதியாக இடம் பெறும். அத்தனை சிறந்த படம். கமல் மற்றும் ஸ்ரீதேவியின் அற்புதமான நடிப்பு, இளையராஜாவின் அபாரமான இசை, பாலுமகேந்திராவின் எதார்த்தமான கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் போன்ற காரணங்களுக்காக இந்தத் திரைப்படம் இளைய தலைமுறையினரால் கட்டாயம் கண்டு ரசிக்கப்பட வேண்டிய ஒரு படைப்பாகும்.
இந்தத் தொடரில் அடுத்து எந்தப் படத்தைப் பற்றி அலசலாம்? கமென்ட்ஸ் ப்ளீஸ்!