சென்னை:
தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், மத்திய மந்திரி எல்.முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது என்றும், இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையில், சம்பந்தப்பட்ட வார்டில் மத்திய மந்திரி எல்.முருகனின் வாக்கை யாரும் செலுத்தவில்லை என்று தெரியவந்தது. சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் எல்.முருகனின் வாக்கு உள்ளது, அந்த வாக்குச்சாவடியில் இரண்டு முருகன் பெயர் இருந்ததால் எழுத்துப்பிழையால் குழப்பம் ஏற்பட்டதாகவும், ஒரு வாக்கு மட்டுமே பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதையடுத்து எல்.முருகன் தனது வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எழுத்துப் பிழை காரணமாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தார்கள் என்றார்.