ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் தமிழக அணி அபார ஆட்டத்தை வெளிபடுத்தி 494 ரன்கள் குவித்துள்ளது.
38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. தமிழக அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 452 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபா இந்திரஜித் 117 ரன்கள் எடுக்க ஷாருக் கான் அதிரடியாக விளையாடி, 148 பந்துகளில் 10 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 194 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் கௌஷிக் காந்தி 55 ரன்களும், விக்கட் கீப்பர் ஜகதீசன் 50 சேர்த்து ஆட்டமிழந்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 494 ரன்கள் எடுத்து டெல்லி அணியை விட 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.