புதுடில்லி: அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த, ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்தை வாங்குவதற்கான ஏல விருப்பத்தை வழங்குமாறு, ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி கேட்டுக்கொண்டுஉள்ளார்.
அனில் அம்பானியின் குழுமத்தை சேர்ந்த, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், வங்கிகளின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவை, கடந்த ஆண்டு நவம்பரில் ரிசர்வ் வங்கி நீக்கியது. மேலும், திவால் நடவடிக்கையிலும் இறங்கியது.
தற்போது ஏல விருப்பத்தை தெரிவிப்பதற்கு, மார்ச் 11ம் தேதி கடைசி என்றும், தீர்வு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் மூன்றாவது பெரிய திவால் நடவடிக்கையாகும். இதற்கு முன் ஸ்ரீ குழுமம் மற்றும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின், ஒட்டுமொத்த கடன் 40 ஆயிரம் கோடி ரூபாய்.
Advertisement