சென்னை: வாக்குச்சாவடிக்கு 5மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித் திருந்த நிலையில், 5 மணிக்கு மேல் வந்து, தங்களை வாக்களிக்க அனுமதிக்குமாறு ஆளும்கட்சியினர் தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் நடந்தேறி உள்ளது. மேலும் கோவையிலும் அரங்கேறி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் சாதாரண வாக்காளர்கள் மாலை 5 மணி வரை வாக்களிக்கவும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதன்படி, வாக்குச்சாவடிகளுக்கு மாலை 5 மணிக்கு முன்பாக வந்திருந்த வாக்காளர்கள் மட்டும், வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், திருவொற்றியூர் கார்க்கில் நகர் பகுதி மற்றும் கிளாஸ் பேக்டரி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாலை 5மணிக்கு மேல் வந்த கும்பல், அங்குள்ள வாக்குச்சாவடி அலுவலர்களிடம் தங்களை வாக்களிக்க அனுமதி கோரி தகராறு செய்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் வாக்களிக்க அனுமதி மறுத்த நிலையில், 5மணிக்கு முன்பாக வந்திருந்தால், டோக்கன் கொடுத்து உங்களை வாக்களிக்க அனுமதித்திருக்க முடியும் என்று எவ்வளவோ கூறியும், அதிகாரிகளை மிரட்டும் வகையில் சிலர் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி முழுவதும் கண்காணிப்பு காமிரா இருப்பதை சுட்டிக்காட்டி காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் அந்த பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பதற்றம் நிலவியது.
அதுபோல, சென்னை மாநகராட்சியின் 104ஆவது வார்டுக்குள்பட்ட சின்மயா மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் கள்ள ஓட்டு போட்ட திமுகவினரைக் கண்டித்து, சுயேச்சை வேட்பாளர் அப்துல் ஜலீல், சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டியக்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.