நீலாம்பரி சேலை, ஓவியா ஹேர்கட் என பிரபலங்களின் உடைகளையும், ஆபரணங்களையும் தேடித் தேடிப் பின்பற்றுவதெற்கென ஒரு தனிக் கூட்டமே உண்டு என சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது இடம் பிடித்திருக்கிறது `புஷ்பா சேலை’.
`புஷ்பா’ படத்தில் அதிரடி நாயகனாக அல்லு அர்ஜுன் கலக்கி இருப்பார். வில்லனாக ஃபகத் பாசில், ராஷ்மிகாவின் நடிப்பு, வைரலான சமந்தா நடனமாடிய பாடல் என ஒரு மாஸ் படத்தை கொடுத்திருந்தார் இயக்குநர் சுகுமார். ஹிட் அடித்த இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியது. இந்நிலையில் `புஷ்பா சேலை’ தற்போது பிரபலமாகி வருகிறது.
`அட, எங்கே விற்கிறது இந்த புஷ்பா சேலை’ என மக்கள் தற்போது இதை ஆர்வமாகத் தேடிவருகின்றனர். இந்த சேலையை விற்று வருபவர் குஜராத்தை சேர்ந்த சரண்பால் சிங். `புஷ்பா’ திரைப்படத்தில் வரும் காட்சிகளை சேலையில் டிசைன் செய்து `புஷ்பா சேலை’ என சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதை பார்த்தவர்கள், `இதோ சேலையை நான் வாங்குகிறேன்’ என சேலைக்கான ஆர்டரை கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்த சேலை தற்போது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரையில் கிட்டத்தட்ட 3,000-க்கும் அதிகமான புஷ்பா சேலைகளை தயாரித்து விற்பனை செய்துள்ளதாக சரண்பால் தெரிவித்துள்ளார்.