புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, விவசாய பணிகளுக்கு ட்ரோன்கள் மூலம் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கும் வேளாண் ட்ரோன் திட்டத்தை, நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், ஈரோடு, புதுக்கோட்டை, தேனி, விழுப்புரம், கடலூர், சேலம், திருவாரூர், கரூர் மாவட்டங்கள் உட்பட நாடுமுழுவதும் 1100 கிசான் ட்ரோன்களை வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்த பிரதமர் பேசியதாவது: இந்தியாவில் ட்ரோன் ஸ்டார்ட் அப்கள் என்ற புதிய கலாசாரம் உருவாகி வருகிறது. இந்த எண்ணிக்கை விரைவில் ஆயிரகணக்கில் உயர்வதுடன் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும். ட்ரோன் துறை வளர்ச்சியில் எந்த தடையும் இல்லை என்பதை மத்திய அரசு உறுதி செயயும். வளர்ச்சியை எளிதாக்க பல சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை ட்ரோன்கள் பெரும்பாலும் பாதுகாப்பு துறை சார்ந்ததாக இருந்தது. 21ம் நூற்றாண்டில் விவசாய வழங்குவதில் இது புதிய அத்தியாயத்தை துவக்கி உள்ளது. ட்ரோன் துறை வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருப்பதுடன் எல்லையற்ற சாத்தியகூறுகளை உருவாக்கும்.
கிராமங்களில் நில உரிமையை பதிவு செய்வதற்கும், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொண்டு செல்லும் திட்டத்திற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. விவசாய ட்ரோன் புதிய புரட்சியின் ஆரம்பம் ஆகும். தங்கள் விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்றவற்றை குறைந்த நேரத்தில் சந்தைகளுக்கு கொண்டு செல்ல அதிக திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை, விவசாயிகள் பயன்படுத்த முடிவதுடன், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும்.அடுத்த 2 ஆண்டுகளில் 1 லட்சம் மேட் இன் இந்தியா ட்ரோன்கள் தயாரிக்கப்பட வேண்டும் என கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் கூறியுள்ளேன். இதன் மூலம், நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
Advertisement