வேலைவாய்ப்பு என்னாச்சு… ராஜ்நாத் சிங் பிரசார கூட்டத்தில் கோபத்துடன் கோஷமிட்ட இளைஞர்கள்

புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் எழுந்து வேலைவாய்ப்பு கோரி கோபத்துடன் முழக்கங்கள் எழுப்பினர். குறிப்பாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இனால் ராஜ்நாத் சிங் உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது.
அவர்களின் கோரிக்கை குறித்து விசாரித்த ராஜ்நாத் சிங், கொரோனா பரவல் காரணமாக சில சிரமங்கள் ஏற்பட்டதாகவும், ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் நடைபெறும் எனவும் உறுதி அளித்துவிட்டு தனது உரையை தொடர்ந்தார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி மற்றும் தீபாவளியை முன்னிட்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கடந்த வாரம் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு வேலை அல்லது சுயவேலை வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. 
மாநிலத்தில் இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி-ஏப்ரல் காலகட்டத்தில் 7.9 சதவீதமாக இருந்தது. 2021ம் ஆண்டு மார்ச்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 13.34 சதவீதமாக அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.