பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் தடையை மீறி கர்நாடகாவின் துமகுருவில் போராடிய மாணவிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. பள்ளி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுப்பியில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கிய இந்த சர்ச்சை தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் கர்நாடகாவின் துமகுருவில் உள்ள எம்பிரஸ் பெண்கள் கல்லூரி முன்பு ஹிஜாப் அணிந்த மாணவிகள், ஹிஜாப் தடைக்கு எதிராக போராடினர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில் அம்மாநில காவல்துறை நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. காவல்துறையின் எஃப்ஐஆரில், “பிப்ரவரி 17, வியாழன் காலை 10 மணியளவில், ஹிஜாப் அணிந்த 10 முதல் 15 மாணவிகள் கொண்ட குழு கல்லூரிக்கு வெளியே கூடி போராட்டம் நடத்தினர். ஹிஜாப் தடை உத்தரவு நகல் கல்லூரி வாயிலின் சுவரில் ஒட்டப்பட்டுள்ளது. அதையும் மீறி மாணவிகள் குழு சட்டவிரோதமாக கூடி, ஹிஜாப் அணிந்து கல்லூரியில் சேருவோம், அதை அகற்ற மாட்டோம் என்று கூச்சலிட்டுள்ளனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு, கல்லூரியின் தினசரி செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த எஃப்ஐஆரில் போராடிய மாணவிகள் பெயரை குறிப்பிடாமல், பொதுவாக 10 முதல் 15 மாணவிகள் கொண்ட குழு என்று காவல்துறை பதிவு செய்துள்ளது. எஃப்ஐஆரில் மாணவிகள் பெயர் குறிப்பிடாமல் பொதுவாக குறிப்பிட்டது, மற்றொரு சிக்கலை ஏற்படுத்தும் வழக்கறிஞர் ஒருவர் எச்சரித்துள்ளார். வழக்கறிஞர் சையதா சபா என்பவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ,”எஃப்ஐஆரில் போராடிய மாணவிகளை பெயர்களை எழுதாமல் ’10-15 தெரியாத பெண்கள்’ என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இது ஹிஜாப் அணிந்த எவரையும் கைது செய்ய வழிவகுக்கும். போராட்டத்தில் பங்கேற்காத மாணவர்கள் கூட கைதாக வழிவகுக்கும் அல்லது கல்லூரி நிர்வாகத்துக்கு பிடிக்காத மாணவர்களையும் அவர்கள் கைது செய்ய வைக்கக்கூடும். மாணவிகள் மீதான இந்த புகார் அபத்தமானது” என்று தெரிவித்துள்ளார்.