ஹூஸ்டன்-‘ஹூஸ்டன் மெட்ரோ’ வாரியத்தின் தலைவர் பதவிக்கு, இந்திய வம்சாவளி பொறியாளர் சஞ்சய்ராமபத்ரனின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், பொது போக்குவரத்திற்கான பஸ்களையும், இலகு ரக ரயில்களையும், நெடுஞ்சாலை வழிகளையும் ஹூஸ்டன் மெட்ரோ வாரியம் தான் நிர்வகித்து வருகிறது.இதன் தலைவராக உள்ள பேட்மேனை, ஐஸ்லாந்திற்கான அமெரிக்க துாதராக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் நியமித்தார். இந்நிலையில், ஹூஸ்டன் மெட்ரோ வாரியத்தின் தலைவர் பதவிக்கு, இந்திய வம்சாவளியான சஞ்சய் ராமபத்ரன், 51, பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஹூஸ்டனில் வசித்து வரும் பொறியாளரான சஞ்சய் ராமபத்ரன், இந்தியாவின் ‘பிட்ஸ் பிலானி’ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர், 2015 முதல் ஹூஸ்டன் மெட்ரோ வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.ராமபத்ரனை மெட்ரோ வாரிய உறுப்பினர்கள், முறைப்படி ஓட்டு போட்டு தேர்வு செய்த பின், ஹூஸ்டன் நகர மேயர் டர்னர், அவரை மெட்ரோ வாரியத்தின் தலைவர் பதவியில் நியமித்து அறிவிப்பு வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சஞ்சய் ராமபத்ரன் மெட்ரோ தலைவராக பதவியேற்கும் பட்சத்தில், இந்த பதவியில் அமரும், முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை இவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement