“ஒரு 500 புக் இருக்கு… 5 மட்டும் எப்படி சொல்ல முடியும்” என ஆரம்பிக்கும் போதே உற்சாகமாக ஆரம்பிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களின் இயக்குநர். “அரிதான புத்தகங்கள் தான் என்னுடைய முதல் சாய்ஸ் ஆக இருக்கும். வழக்கமா புத்தகக் கடைகளில் கிடைக்காத புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும். அப்படியான அரிதான புத்தகங்களைத் தேடி தேடி வாங்குவேன். காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் ஆரம்பக்கால புத்தக கண்காட்சிகளில் இருந்தே புத்தக திருவிழாவுக்கு போவது என்னுடைய வழக்கம். அங்கு போவது என்பதே உற்சாகமான மனநிலையைத் தரும். சம்பளம் 500 ரூபாய் என இருக்கும் போதிலிருந்து நான் புத்தகங்கள் வாங்குவேன். புத்தக விலை இப்போது தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. 2000 ரூபாய் இருந்தாலே நான்கு புத்தகங்கள் தான் வாங்க முடியும், அதுவும் மனுஷ் புத்தகம் என்றால் 2000 ரூபாயும் ஒரு புத்தகத்துக்கே போய்விடும். மனுஷிடம் கேட்டால் சட்டை வாங்குறீங்க, ஜாலியா சிக்கன் வாங்கி சாப்பிடுறீங்க. புக் வாங்க மாட்டீங்களா என்பார்” எனச் சிரிக்கிறார்.
அப்போ மிஸ் யூ உங்க பட்டியலில் இருக்கா…
நிச்சயமா `மிஸ் யூ’ வாங்கணும் என்கிறார். ப்ளூ டிக் வரலைன்னு கவலைப்படுறது, சார்ஜ் இல்லைன்னா பதட்டமாவது இப்படியான நவீன மனிதனின் புதிய கவலைகளை அவர் எழுத்தில் கொண்டு வருவது சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த கவிதை ‘டோலோ 650’ என்று சொல்லணும்.”
முந்தைய புத்தகக் காட்சியில் வாங்கியதை அடுத்த புத்தக காட்சிக்குள் படித்து விடவேண்டும் என்பதைப் பற்றி…
“படிக்கணும்னு இல்லை. நம்மைச் சுற்றி புத்தகங்கள் இருப்பதே மகிழ்ச்சியான ஒன்று. வீடு முழுவதும் புத்தகங்களால் நிறைந்திருக்கணும் என விரும்புவேன். எங்க போனாலும் ஒரு புத்தகம் கூடவே இருக்கணும். மின்னல் பொழுதே தூரம் என்கிற தேவதேவன் வரியோ ‘கடைசி கூறு வரை எழுதும் பென்சில்’ன்னு சிவராமன் சொல்வது போலவோ ஒரு சொல்லோ வார்த்தையோ அந்த நாளுக்கு கிடைச்சா போதும். அம்பை சொல்வது போல ‘வெவ்வேறு ஊர்களின் ஜன்னல்கள் வழியாக தான் இந்த உலகைப் பார்க்கிறேன்’. அந்த ஜன்னல் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்த உலகத்தைப் பார்க்க ஒரு சட்டகம் தேவைப்படுகிறது. சினிமாவும் ஒரு ஜன்னல் தான். இலக்கியமும் ஒரு ஜன்னல் தான்.”
புத்தகம் என்ன செய்யும் என நினைக்கிறீங்க…
“வானம் பூமி இவற்றுக்கு முன் நாம் ஒண்ணுமில்லன்னு திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. மனிதன் பெரியவன் என்கிற அகந்தையில் செய்கிற வேலைகள் உவப்பானதாக இருப்பதில்லை. அதற்கு இலக்கியம் தேவைப்படுகிறது. வாசிப்பு தேவைப்படுகிறது. அன்றாட மிஷின் வாழ்வில் இருந்து விடுபட இந்த வாழ்க்கைய சுவாரசியமாக வசீகரமாக மாற்ற புத்தகங்கள் தேவைப்படுகிறது”
நீங்கள் வாங்க இருக்கும் 5 புத்தகங்கள்…
1. விலாசம் (சிறுகதை தொகுப்பு) – பா.திருச்செந்தாழை -எதிர் வெளியீடு
2. ஒளிரும் பச்சை கண்கள் (சிறுகதை தொகுப்பு) -கார்த்திக் பாலசுப்பிரமணியன் -காலச்சுவடு பதிப்பகம்
3. மிஸ் யூ இந்த முறையும் இவ்வளவு தான் சொல்ல முடிந்தது (கவிதைத் தொகுப்பு) -மனுஷ்யப்புத்திரன் -உயிர்மை பதிப்பகம்
4. அங்கொரு நிலம் அதிலொரு வானம் (பயண நூல்) – மருத்துவர் கு.சிவராமன் -விகடன் பிரசுரம்
5. சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சை பறவை (சிறுகதைகள்) -அம்பை- காலச்சுவடு பதிப்பகம்