கைபேசி செல்லுலார் போனை உருவாக்கிய அமெரிக்க பொறியாளர் மார்ட்டின் கூப்பர் கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டார். அன்றைய தேதிக்கு அது தொலைபேசி அழைப்புக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் அது பல்வேறு பரிணாம வளர்ச்சியை பெற்று ஸ்மார்ட் போனாக தற்போது உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், முழுக்க முழுக்க ஸ்மார்ட் போனை பயன்படுத்தி ‘பாண்டிச்சேரி’ என்ற முழுநீள திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயருக்கு ஏற்ப குட்டி பிரான்ஸ் என போற்றப்படும் புதுச்சேரி நகரில் இந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருந்தது. வரும் 25-ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகிறது.
இந்த படத்தை மராத்தி மொழி இயக்குனர் Sachin Kundalkar இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தில் பாடல் ஒன்றும் வெளியாகி உள்ளது. புதுச்சேரி நகரின் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நகரப்பகுதி, அதை சார்ந்துள்ள உணவகங்கள், மணக்குள விநாயகர் கோவிலின் ‘லட்சுமி’ யானை, கடற்கரை சாலை, துய்மா வீதியில் உள்ள ‘Our Lady of Angels தேவாலயம்’ மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் உழவர் சந்தை மாதிரியான இடங்கள் இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் காட்சிகளில் இடம் பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த படத்தை புதுச்சேரி நகரில் உள்ள திரையரங்கம் ஏதேனும் ஒன்றில் ஸ்க்ரீன் செய்ய வேண்டுமென புதுச்சேரி நகரை நேசிப்பவர்கள் சொல்வதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.