Election Updates: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கியது.
பொதுமக்கள் ஆர்வமுடன் முன்வந்து வாக்களித்து வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் 31,150 வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
12,607 பதவியிடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் சுமார் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்று அமைதியான முறையில் வாக்களிப்பதை உறுதி செய்வதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, மற்றும் பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இது பலமுனைப் போட்டியாகத் தோன்றினாலும், மாநிலம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் 31,150 பதற்றமான வாக்குச்சாவடிகளை தமிழ்நாடு காவல்துறை அடையாளம் கண்டுள்ளது மற்றும் இன்று நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இந்தச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 455 இடங்களில் போலீசார் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்துள்ள நிலையில், அவர்கள் சட்டவிரோத ஆயுதங்கள், மதுபானங்கள் மற்றும் சிக்கலை உருவாக்கும் நோக்கத்துடன் வரும் வெளியாட்களின் தேவையற்ற நடமாட்டங்களைத் தடுக்க சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காவல்துறை பாதிக்கப்படக் கூடிய 1,343 இடங்களை அடையாளம் கண்டு, குறைந்தபட்சம் 846 விரைவு தடுப்பு குழுக்களை நிலைநிறுத்தியுள்ளது. இதனால் அவர்கள் அவசர காலத்தில் பாதிக்கப்படக்கூடிய வாக்குச் சாவடிகளை விரைவாகச் சென்றடைவார்கள்.
தேர்தல் பணிக்காக மொத்தம் 97,882 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கொரோனா வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் விதிமீறல் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மதுரை திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டில், அதிகளவில் கள்ள ஓட்டு பதிவாகியுள்ளதாக திமுக வேட்பாளர் புகார் அளித்ததை தொடர்ந்து, இந்த வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் அலுவலர் தேர்தல் ஆணைத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது இதில் சென்னை மாநகராட்சி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல், ஆவடி மாநகராட்சியில் 5 மணி நிலவரப்படி, 45.98% வாக்குகளும், தாம்பரம் மாநகராட்சியில், 5 மணி நிலவரப்படி 43% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கொரோனா பாதித்தோருக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் வாக்களித்தனர். தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது
திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வண்ணாரப்பேட்டையில் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்
சென்னை அண்ணா நகர் வாக்குச்சாவடியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது வாக்கை பதிவு செய்தார்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மாநகராட்சிகளில் – 39.13%, நகராட்சிகளில் – 53.49%, பேரூராட்சிகளில் – 61.38% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. 5 மணிக்கு முன் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படும். கொரோனா தொற்று பாதித்தவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை. அவர் வாக்களிக்கலாம். சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் முருகன் என்ற பெயர் இரண்டு முறை உள்ளது. அதில் ஒன்றுக்கு வாக்கு செலுத்தப்பட்டுள்ளது. என மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வேலூர் மாநகராட்சி 18வது வார்டில் உள்ள, வாக்குச்சாவடி எண் 90-ல் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதாகியதால், 2 மணி நேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் பதிவாகியுள்ளன
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடியில் திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிக அளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, இரு கட்சிகளை சேர்ந்தவர்களையும் வெளியேற்றி வருகின்றனர்
சென்னை மயிலாப்பூர் தெற்கு கோயில் அருகே QR குறியீடு கொண்ட இரட்டை இலை, ஜெயலலிதா புகைப்படம் அச்சடிக்கப்பட்ட கார்டுகளை கொடுத்துக்கொண்டிருந்த அதிமுக வட்டச்செயலாளர் தங்கதுரையை, தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
சென்னை அண்ணாநகர் வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதாகவும், மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுக்குமா என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் இங் எங் ஹென் சந்தித்து பேசினார். இருதரப்பு , ஆசியான் தொடர்பான பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபா வாக்குச்சாவடியில் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் 35.34 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், குறைந்தபட்சமாக சென்னையில் தான் 23.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூரில் 36.07%, கரூரில் 50.4%, காஞ்சிபுரத்தில் 41.30%, நெல்லையில் 37.7% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அமெரிக்காவிலிருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் இம்தியாஸ் ஷெரீப் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே 38வது வார்டில் காட்டூர் பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை, பூத் ஸ்லீப்பை பெட்டியில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது வாக்கினை செலுத்தினார்.
தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் பயணிகளுடன் வந்த பேருந்தை 10 நிமிடம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.
மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கோரி, தகராறு செய்த பாஜக முகவர் கிரிராஜனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் முலம் வாக்கு சாவடிக்கு வந்த கோவிந்தம்மாள் என்ற பெண்மணி, தன்னுடைய ஜனநாயக கடமையாற்றினார்
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி 200 மீ.க்குள் வந்து வாக்கு சேகரித்த அதிமுக, பாஜக மற்றும் பாமகவினரை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு நிலவியது.
நெல்லை 26வது வார்டில் நாகராஜன் என்பவரது வாக்கினை வேறொருவர் செலுத்தியதால், தேர்தல் விதிப்படி படிவம் 22ஐ பூர்த்தி செய்து சேலஞ்ச் வாக்கை நாகராஜன் பதிவு செய்தார்.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சென்னை கோடம்பாக்கத்தில் வாக்களித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரியலூர் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.79% வாக்குகள் பதிவு!
மதுரை மேலூர் நகராட்சி 8வது வார்டில்’ வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை’ பாஜக முகவர் அகற்ற கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குப்பதிவு. சென்னையில் 17.88% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திண்டிவனம் வாக்குச்சாவடியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்,சென்னை தி.நகர் வாக்குச்சாவடியில் நடிகர் டி.ராஜேந்தர் தங்கள் வாக்கை செலுத்தினர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வாக்கை செலுத்தினார்.
டி.நகர் வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்திய வி.கே. சசிகலா’ என் அக்காவுடன் சேர்ந்துதான் வாக்களித்திருக்கிறேன். இந்த முறைதான் நான் தனியாக வந்து வாக்களித்திருக்கிறேன் என கண்ணீர்மல்க கூறினார்.
சென்னை கொட்டிவாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாக்களித்தார்.
கரூர் மாநகராட்சியின் 38வது வார்டில் வாக்காளர்களுக்கு செல்போன் விநியோகம் செய்த புகாரில் அதிமுக பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், தன் மனைவியுடன் கானத்தூர், குடுமியாண்டிதோப்பு பகுதியிலுள்ள புனித தோமையர்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் கனிமொழி எம்.பி. வாக்களித்தார்.
தேனி பெரியகுளம் வாக்குச்சாவடியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். அதேபோல் டி.நகர் வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வி.கே. சசிகலா வாக்களித்தார். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிதம்பரம் நகராட்சியில் வாக்குப்பதிவு செய்தார்.
சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளது. சென்னையில் 3.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மிகவும் குறைந்த அளவாக தாம்பரம் மாநகராட்சியில் 3.30 சதவீத வாக்குப் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். இந்நிலையில்’ சென்னை மக்களை வாக்களிக்க வருமாறு சென்னை மாநகாராட்சி ட்வீட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Dear Chennai! Come out and Vote!
1) Find your Polling Station: https://t.co/9BzoEH57lb
2) Go to the PS with a valid ID card
3) Vote!
— Greater Chennai Corporation (@chennaicorp) February 19, 2022
மதுரை மேலூர் நகராட்சி 8வது வார்டில்’ வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை’ பாஜக முகவர் அகற்ற கூறிய புகாரில்’ ஆட்சியர் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!
தற்போதுவரை பேரூராட்சிகளில் 11.74% வாக்குகள் பதிவாகியுள்ளன. நகராட்சிகளில் 10.32% வாக்குகள், மாநகராட்சி தேர்தலில் 5.78% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் கவிஞர் வைரமுத்து தனது வாக்கினை செலுத்தினார். அதேபோல், சென்னை ஈக்காட்டுதாங்கல் வாக்குச்சாவடியில் நடிகர் அருண்விஜய் வாக்களித்தார்.
சென்னையில் டிடிவி தினகரன், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோர் வாக்களித்தனர். மதுரையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வாக்களித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சேர்ந்து வாக்களித்தார்.
கோவையில் காரில் பாஜக கொடியுடன் எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்ததாக திமுகவினர் புகார். பாஜக, திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரையில் உள்ள வாக்குச்சாவடியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாக்களித்தார்.
திமுக எம்.பி. திருச்சி சிவா வாக்களிக்க வந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது. சிறிது நேரம் காத்திருந்த திருச்சி சிவா வாக்குப்பதிவு இயந்திரம் சரிசெய்யப்பட்ட பின் வாக்களித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டிவனம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
கோவை, சுகுணாபுரத்தில் வாக்களித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
கிருஷ்ணகிரியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்றபடி வாக்களித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி.
சென்னை திருவான்மியூரில் 179 ஆவது வார்டுக்கு உட்பட்ட சிங்காரவேலன் நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுகவினர் முயன்றதாகவும் போலீஸார் வந்ததும் தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யார் பணம் கொடுக்க வந்தது என்று போலீஸார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் தனது வாக்கினை செலுத்தினார்.