ஒட்டாவா-வட அமெரிக்க நாடான கனடா தலைநகர் ஒட்டாவாவில், போலீசின் அதிரடி நடவடிக்கைகளால், அரசுக்கு எதிரான போராட்டங்கள் முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கனடாவில், 32 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.கனடாவுக்குள் நுழையும்லாரி டிரைவர்கள், கொரோனா தடுப்பூசியின் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்று வாரங்களுக்கும் மேலாக, நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தன. தலைநகர் ஒட்டாவாவில், சாலைகளில் திரண்டு, அரசுக்கு எதிரான கோஷங்களை மக்கள் எழுப்பி வந்தனர். பார்லிமென்ட் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் திரண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, தலைநகரின் முக்கிய பகுதிகளில், போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவர்கள், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தியும், வன்முறைகளில் ஈடுபட்டோரை கைது செய்தும், அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இந்நிலையில், போலீசின் துரிதமான செயலால், ஒட்டாவாவில் போராட்டங்கள் பெருமளவு குறைந்துள்ளன. பலர், தங்கள்போராட்டங்களை, ‘வாபஸ்’ பெற்றுள்ளனர். சிறிய குழுக்கள் மட்டுமே, ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.முக்கிய பகுதிகள், போலீசின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், நாட்டில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
Advertisement