திருவனந்தபுரம்: கேரள அரசு பஸ்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போனில் சத்தம் போட்டு பேசுவதற்கும், அதிக சத்தத்தில் பாட்டு வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களிலும், பஸ்களிலும் பயணம் செய்பவர்களுக்கு செல்போன் மூலம் ஏற்படும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. செல்போனில் சத்தமாக பேசுவதும், அதிக சத்தத்தில் வீடியோ, பாட்டுகளை கேட்பதும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பயணிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்ப்பதற்காக ரயில்களில் இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல் யாரும் செல்போனில் சத்தம்போட்டு பேசவோ, பாட்டு வைக்கவோ கூடாது என்று ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதேபோல் கேரள அரசு பஸ்களிலும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள அரசு பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் பயணி, இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு புகார் அனுப்பி இருந்தார். அதில், திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோட்டுக்கு பஸ்சில் சென்றேன். அப்போது ஒருவர் செல்போனில் சத்தமாக பாட்டு வைத்ததன் மூலம் தன்னால் தூங்க முடியவில்லை,எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அரசு பஸ்களில் இனி செல்போனில் சத்தம் போட்டு பேசவோ, பாட்டு கேட்கவோ கூடாது என்று கேரள அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பிஜு பிரபாகர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக அனைத்து பஸ்களிலும் அறிவிப்பு பலகை வைக்கவும் அவர் உத்தரவிட்டு இருக்கிறார். பயணிகள் புகார் செய்தால் சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டர்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.