நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சிவப்பு நிற காரில் வந்து வாக்காளித்தார். இந்த கார் இன்சூரன்ஸ் காலாவதியான கார் என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று (பிப்ரவரி 19) மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தவறாமல் வந்து வாக்களிக்கும் சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் வாக்களிக்கவில்லை. ரஜினிகாந்த், அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட சினிமா நடிகர்கள் வாக்களிக்கவில்லை. ஆனாலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்தார்.
நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்களிப்பதற்காக அவருடைய வீட்டில் இருந்து ரசிகர்கள் சூழ சிவப்பு நிற காரில் வந்து நீலாங்கரை வேல்ஸ் வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கைப் பதிவு செய்து சென்றார்.
விஜய் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தது கவனம் பெற்றது. ஆனால், இந்த முறை, நடிகர் விஜய் வந்த சிவப்பு கார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் வந்த சிவப்பு நிற காரின் இன்சூரன்ஸ் காலவதியாகிவிட்டது என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு வந்த சிவப்பு நிற காரின் புகைப்படம், வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அந்த காரின் பதிவு எண்களை வைத்து நெட்டிசன்கள் சிலர் இணையத்தில் தேடிப்பார்த்துள்ளனர். அதன்படி, அந்த காரின் உரிமையாளர் ஜோசப் விஜய் என்றும் அந்த காருக்கான இன்சூரன்ஸ் 2020ம் ஆண்டு மே மாதமே காலாவதியாகிவிட்டதாக குறிப்பிட்டப்படுள்ளது என்று தகவல்களை பகிர்ந்தனர். இதனால், நடிகர் விஜய் இன்சூரன்ஸ் காலாவதியான காரில் வந்தாரா என்ற சூடான விவாதம் சமூக ஊடகங்களில் நடந்து வருகிறது.
காரின் பதிவு எண் மற்றும் அதன் இன்சூரன்ஸ் காலாவதியான தேதியைக் குறிப்பிட்டு சில நெட்டிசன்கள், சினிமாவில் நடித்து கோடிகளை சம்பாதிக்கும் பெரிய நடிகர் காருக்கு இன்சூரன்ஸ்கூட செலுத்துவதில்லையா என்று கிண்டல் செய்ய அதற்கு விஜய் ரசிகர்கள், இன்சூரன்ஸ் தகவல்கள் சில நேரம் அப்டேட் ஆகாமல் இருக்கலாம் என்று பதிலளித்து வருகின்றனர்.
எப்படியானாலும், நடிகர் விஜய் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு வந்த சிவப்பு நிற கார் சமூக ஊடகங்களில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“