அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மணவாலாவில் உள்ள வாக்குச்சாவடி எண் 101ல் இரட்டையர்களான சோஹ்னா மற்றும் மோஹ்னா வாக்களித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மொத்தம் 2.14 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து செல்கின்றனர். இந்நிலையில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வாக்களித்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநில அரசு மக்கள் தொடர்பு அதிகாரி கவுரவ்குமார் கூறியதாவது: பஞ்சாப் அமிர்தசரஸ் மணவாலாவில் உள்ள வாக்குச்சாவடி எண் 101ல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான சோஹ்னா மற்றும் மோஹ்னா வாக்களித்தனர். இவர்களின் வாக்கு மிகவும் தனித்துவமானது. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பட்டியலின் கீழ் வாக்களித்த இவர்களது வாக்குப்பதிவை முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவர்கள் இணைந்திருந்தாலும் 2 தனி வாக்காளர்கள். அவர்களின் வாக்குகள் ரகசியம் காக்கப்படும் வகையில் அவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.