பரூக்காபாத்:
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. பரூக்காபாத் வாக்குச் சாவடியில் இன்று காலை தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்குப்பதிவு நடத்தினர்.
ஹத்ராஸ், ஃபிரோசாபாத், எட்டா, கஸ்கஞ்ச், மெயின்புரி, ஃபரூகாபாத், கன்னோஜ், எடாவா, அவுரையா, கான்பூர் தேஹாத், கான்பூர் நகர், ஜலான், ஜான்சி, லலித்பூர், ஹமிர்பூர் மற்றும் மஹோபா ஆகிய 16 முக்கியமான மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
சமாஜ்வாதி கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய மந்திரியுமான எஸ்பி சிங் பாகேல் மற்றும் அகிலேஷின் உறவினரும், லோஹியா சமாஜ்வாதி கட்சி தலைவருமான ஷிவ்பால் சிங் யாதவ் உள்பட மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவியும் ஃபரூகாபாத் தொகுதி வேட்பாளருமான லூயிஸ் குர்ஷித் ஆகியோர் காலையில் வாக்களித்தனர்.