புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவையின் மூன்றாவது கட்ட தேர்தல் இன்று பிப்ரவரி 10 இல் நடைபெறுகிறது. 2017 தேர்தலில் பாஜகவிடம் சென்று விட்ட யாதவர், முஸ்லீம் நிறைந்த தொகுதிகளை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் மீட்பாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் பிப்ரவரி 20 இல் நடைபெறுகிறது. மொத்தம் 16 மாவட்டங்களின் 59 தொகுதிகளில் பாஜக 2017 தேர்தலில் 49 பெற்றிருந்தது.
சமாஜ்வாதி 9, காங்கிரஸுக்கு ஒரு தொகுதி மட்டும் கிடைத்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு (பிஎஸ்பி) ஒன்று கூடக் கிடைக்கவில்லை. இந்தமுறை, மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் போட்டியால் அது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கன்னோஜ், மெயின்புரி, பெரோஸாபாத், ஏட்டா, எட்டாவா மற்றும் ஃபரூகாபாத் ஆகிய மாவட்டங்களில் யாதவர் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். இதன் காரணமாக, அதன் தொகுதிகள் சமாஜ்வாதி கோட்டையாகக் கருதப்படுகிறது.
2017 தேர்தலில் வீசிய பிரதமர் நரேந்திர மோடி அலையால், சமாஜ்வாதிக்கு அதில் வெறும் 8 தொகுதிகள் கிடைத்திருந்தன. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) தலைவியான மாயாவதியின் முஸ்லிம் வேட்பாளர்களால் வாக்குகள் பிரிந்தன.
இதில் சிறுபகுதியை, ஹைதராபாத் எம்.பியின் அசதுத்தீன் ஒவைசியின் அகில இந்திய இத்தாஹாதுல் முஸ்லிமின் கட்சியும் பிரிந்தது. மேலும், சமாஜ்வாதி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் சகோதரரான ஷிவ்பால்சிங் யாதவ், அகிலேஷுடனான மோதலால் தனிக்கட்சி துவக்கி போட்டியிட்டிருந்தார்.
இதுவும், யாதவர் வாக்குகள் பிரியக் காரணமானது. இந்த பிரிவின் காரணமாக, 2019 மக்களவை தேர்தலிலும் கன்னோஜில் போட்டியிட்ட அகிலேஷ்சிங்கின் மனைவியான டிம்பிள் யாதவும் பாஜகவிடம் தோற்க வேண்டியதானது.
இந்ததேர்தலில், அகிலேஷிங் தலைமையிலான கூட்டணியில் தன் கட்சியை சேர்த்துள்ளார் ஷிவ்பால்சிங். எனவே, முஸ்லிம்களுடன் யாதவர்கள் வாக்குகளும் சமாஜ்வாதிக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கன்னோஜின் நகர தொகுதியில் உபியில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அசீம் அருண் போட்டியிடுகிறார். இப்போட்டிக்காக தனது கான்பூரின் ஐ.ஜி பதவியை ராஜினாமா செய்த அசீம், பாஜகவில் இணைந்திருந்தார்.
தான் சார்ந்த தலித் சமூகத்தின் ஜாதவ் பிரிவின் வாக்குகளை கான்பூர் பகுதியிலிருந்து அசீம் பாஜகவிற்கு பெற்றுத் தருவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஹாத்தரஸில் அதிகமுள்ள தலித் வாக்குகளை பிஎஸ்பியும், காங்கிரஸும் பிரிப்பது பாஜகவிற்கு சாதகமாக உள்ளது.
உ.பி.யின் வறட்சிப்பகுதியான புந்தேல்கண்டின் ஹமீர்பூர், ஜலோன், ஜான்ஸி, லலீத்பூர் மற்றும் மஹோபா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2009 முதல் இதன் 19 தொகுதிகளையும் தன்வசம் வைத்திருந்த சமாஜ்வாதியிடம் இருந்து பாஜக 2017 தேர்தலில் பறித்திருந்தது.
இதில் ஒன்றான ஜலோனின் ஒரய் தொகுதியை சேர்ந்தவராக பாஜகவின் உ.பி. மாநிலக் கட்சித் தலைவரான ஸ்வதந்திரதேவ் சிங் உள்ளார். இவர் இப்பகுதியின் அதிகமுள்ள குர்மி எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். உ.பி.யில் எந்த ஆட்சி வந்தாலும், புந்தேல்கண்டின் ஏழு நதிகளில் 20 அணைகள் அமைந்தும் தண்ணீர் பிரச்சனை தீரவில்லை என்ற புகார் தொடர்வதாகக் கருதப்படுகிறது.-