லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக தெலங்கானா பாஜ எம்எல்ஏ ராஜா சிங் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.உத்தரபிரதேசத்தில் 2 கட்ட சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 3ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவை சேர்ந்த பாஜ எம்எல்ஏ ராஜா சிங், சமீபத்தில் உத்தரபிரதேச தேர்தல் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘உத்தரபிரதேச தேர்தலில் பாஜதான் வெற்றிபெறும். இந்துக்கள் ஆதரவு முதல்வர் ஆதித்யாநாத்திற்குதான் உள்ளது. பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், யோகிக்கு வாக்களிக்காத மக்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ மிக பெரிய சர்ச்சையானது. இந்நிலையில் இவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அப்போது, தனது கருத்துக்கு விளக்கம் அளிக்க கூடுதல் நேரம் கேட்டார். கூடுதலாக 24 மணி நேரம் கொடுக்கப்பட்டு, நேற்று மாலை வரை கெடு விதிக்கப்பட்டது. அதற்கு பிறகும் ராஜா சிங் விளக்கமளிக்கவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘ராஜா சிங் பேசிய கருத்து, முழுக்க முழுக்க தவறானது. பொறுப்பற்ற தன்மை கொண்டது. தவறான உதாரணத்தை, அழுத்தத்தை ஏற்படுத்த கூடியது. அவர் தேர்தல் விதிகள் 171சி மற்றும் 171 எப் ஆகியவற்றை மீறிவிட்டார். இதனால் அடுத்த 72 மணி நேரங்களுக்கு இவர் பொது மேடைகளில் பேச கூடாது. நிருபர்கள் சந்திப்பு மற்றும் கூட்டங்களை நடத்த கூடாது. அறிக்கைகள் வெளியிட கூடாது’ என்று கூறி தடை விதித்துள்ளது. அதோடு இவர் மீது வழக்குபதியும்படி இந்திய தேர்தல் ஆணையம், தெலங்கானா மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று மாலை 6 மணியில் இருந்து இந்த தடை அமலுக்கு வருகிறது. இவர் பேஸ்புக் விதிகளை மீறிவிட்டார் என்று கூறி கடந்த 2020 வருடம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்டா கிராமில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாஜ எம்எல்ஏ ராஜா சிங், இந்தியா வரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல்மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பேஸ்புக், இன்ஸ்டாவில் கணக்கு தொடங்குவதில் இருந்து இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.