லக்னோ:
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ந் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்ததால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. 11 மணியளவில் 21 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.81 சதவீதம், 5 மணி நிலவரப்படி 57.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, இறுதி வாக்குப்பதிவு குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் பின்னர் வெளியிடும்.
59 தொகுதிகளிலும் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் கர்ஹால் தொகுதியில் நிற்கிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா மத்திய மந்திரி சத்யபால்சிங் பகேல் போட்டியிடுகிறார். அகிலேஷ் யாதவ் ஜஸ்வந்த் நகர் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.