லக்னோ: உத்தர பிரதேசத்தில் 3-ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் உள்ளிட்ட தொகுதிகளில் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 10, 14-ம் தேதிகளில் இரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 3-ம் கட்டமாக இன்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதி களில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.16 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக 25,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் போட்டியிடுகிறார். இதன்காரணமாக இந்த தொகுதி மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.