ஒசாமா போன்ற பயங்கரவாதியை ‘ஜி’ என அழைக்கிறார்கள்… சமாஜ்வாடி, காங்கிரஸ் மீது பிரதமர் கடும் தாக்கு

ஹர்டோய்:
உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோயில் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கினார். இந்த கட்சிகள் பயங்கரவாத விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டினார்.
“2008ஆம் ஆண்டில் நிகழ்ந்த அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் 56 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர். தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது. அதுபோன்ற பயங்கரவாதிகளை சில கட்சிகள் ஆதரிக்கின்றன. பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் காட்டுகின்றன. 
சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் அணுகுமுறை கவலையளிக்கிறது. இவர்கள் ஒசாமா போன்ற பயங்கரவாதியை ‘ஜி’ என்று மரியாதையுடன் அழைக்கின்றனர். பாட்லா ஹவுஸ் என்கவுன்டரில் பயங்கரவாதிகளை ஒழித்ததற்காக கண்ணீர் விட்டனர். இதேபோல் உத்தரபிரதேசத்தில் நடந்த 14 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்குகளில், பல பயங்கரவாதிகளின் மீதான வழக்குகளை திரும்ப பெற, முந்தைய சமாஜ்வாதி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பயங்கரவாதிகள் தொடர்ந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினார்கள். ஆனால், சமாஜ்வாடி அரசாங்கம் இந்த பயங்கரவாதிகள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கவில்லை” என மோடி சரமாரியாக விமர்சித்தார்.
இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறும் உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.