ஒமைக்ரான் பரவ ஆரம்பித்தாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “இந்தக் காலகட்டத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் தொற்று, முன்பை விட வித்தியாசமானது. ஒமைக்ரான் அதிகம் தொற்றும் தன்மை கொண்டது. இது கடினமாக இருக்கப் போகிறது. கோவிட் மாறும்போது நாமும் மாற வேண்டியுள்ளது. ஆனால், இந்த முறை ஒமைக்ரான் காரணமாக கரோனா பரவல் ஏற்பட்டாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை.
கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்க உள்ளோம். கடைகள் திறப்பு, உள்ளூர் போக்குவரத்து வழக்கம் போல் இருக்கும். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் 93%க்கு மேலான மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 52%க்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹானின் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா , 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளைக் கடந்த பிறகு கரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
தடுப்பூசியால் கரோனாவின் தீவிரத் தன்மை உலக அளவில் குறைந்தாலும், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கரோனா தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் கரோனா முடிவுக்கு வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.